காரியாபட்டியில் பேரூராட்சி வணிக வளாகத்தில் பதுக்கப்பட்ட 900 மது பாட்டில் பறிமுதல் காரில் கடத்தி வரப்பட்ட 288 பாட்டில்களும் சிக்கின

பேரூராட்சி வணிக வளாகத்தில் பதுக்கி வைக்கப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2017-04-02 23:00 GMT

காரியாபட்டி,

சுப்ரீம்கோர்ட்டின் உத்தரவுப்படி விருதுநகர் மாவட்டம் முழுவதும் 110 மதுபானக்கடைகள் மூடப்பட்டுள்ளன. புதிய இடங்களில் கடையை திறக்க அதிகாரிகள் முனைப்பு காட்டி வரும் நிலையில், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் அதிகாரிகள் திணறி வருகின்றனர். அதேபோல காரியாபட்டியில் 3 இடங்களில் இருந்த கடைகள் மூடப்பட்டு விட்ட நிலையில் புதிய இடம் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது. பொதுமக்கள் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து போர்க்குரல் எழுப்பி வரும் நிலையில் மற்றொரு புறம் கடை இல்லாததால் மதுபான பிரியர்கள் தவிக்கும் நிலையும் உள்ளது.

இந்த நிலையில் பதுக்கி வைத்து அனுமதியின்றி மதுபானங்களை விற்க ஒரு கும்பல் முயற்சித்துவருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைதொடர்ந்து காரியாபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது பேரூராட்சி வணிக வளாகத்தில் பூட்டிக்கிடந்த ஒரு கடையினை திறந்து சோதனையிட்டனர். அங்கு 900 மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். பூட்டிக்கிடந்த கடையில் மது பாட்டில்களை பதுக்கியவர்கள் யார் என்று விசாரணை நடந்து வருகிறது.

காரில் கடத்தல்

இதேபோல திருச்சுழி பகுதியில் 5–க்கும் மேற்பட்ட மதுபானக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் திருச்சுழி அருகிலுள்ள புலிக்குறிச்சியை சேர்ந்த பன்னீர்செல்வம்(வயது32) மேல கண்டமங்கலத்தை சேர்ந்த தங்கப்பாண்டி, பூபதி ஆகியோர் காரியாபட்டி அருகிலுள்ள வீரசோழனில் இருந்து காரில் 288 மதுபாட்டில்களை காரில் கொண்டு வந்தனர்.

திருச்சுழியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி காரை நிறுத்தி சோதனையிட்டார். மதுபாட்டில்கள் கடத்திவரப்பட்டது தெரிந்ததும் அவற்றை பறிமுதல் செய்தார். காரும் பறிமுதல் செய்யப்பட்டது. பன்னீர்செல்வம் உள்பட மூவரும் கைது செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்