சுங்கச்சாவடியை அகற்றக்கோரி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சுங்கச்சாவடியை அகற்றக்கோரி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம் 100–க்கும் மேற்பட்டோர் கைது;
பூந்தமல்லி,
சுங்கச்சாவடிகளால் மக்கள் பணம் கொள்ளை அடிக்கப்படுகிறது. எனவே தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் நேற்று தாம்பரம்–மதுரவாயல் நெடுஞ்சாலையில் போரூரில் உள்ள சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர்.
இதற்காக மாநில துணை பொதுச்செயலாளர் வேணுகோபால் தலைமையில் பெண்கள் உள்பட 150–க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்தனர். ஆனால் சுங்கச்சாவடிக்கு முன்னதாகவே அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அதே இடத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷமிட்டனர்.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த கோயம்பேடு உதவி கமிஷனர் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100–க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். அவர்களை வேனில் ஏற்றி வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் ஆர்ப்பாட்டம் முடியும் வரை சுங்கச்சாவடியில் வாகனங்கள் கட்டணம் இன்றி செல்ல அனுமதிக்கப்பட்டன.