எழும்பூரில் சிக்னல் கோளாறு: மின்சார ரெயில் சேவை பாதிப்பு

எழும்பூரில் சிக்னல் கோளாறு: மின்சார ரெயில் சேவை பாதிப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்களும் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி

Update: 2017-04-01 22:30 GMT

சென்னை,

சென்னை எழும்பூரில் சிக்னல் கோளாறு காரணமாக மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. எக்ஸ்பிரஸ் ரெயில்களும் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடுமையாக அவதிப்பட்டனர்.

சிக்னல் கோளாறு

சென்னை எழும்பூர்–சேத்துப்பட்டு ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள பகுதியில் நேற்று காலை 8 மணியளவில் மின்சார கேபிள் எரிந்து சிக்னலில் கோளாறு ஏற்பட்டது. இதனால் தென் மாவட்டங்களில் இருந்து வந்த சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன.

அதேபோல் மின்சார ரெயில் சேவையும் இருமார்க்கமாக (கடற்கரை – தாம்பரம், தாம்பரம் – கடற்கரை) நிறுத்தப்பட்டன. காலை நேரம் என்பதால் வேலைக்கு செல்வோரும், பொதுமக்களும் கடும் அவதியடைந்தனர். தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் சிக்னலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

2 மணி நேரம் பாதிப்பு

சிக்னல் கோளாறு சரி செய்யும் வரை மின்சார ரெயில்கள் பழைய முறையில் கொடி அசைத்து குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டன. ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சுமார் 2 மணி நேரமாக போராடி சிக்னலில் ஏற்பட்ட பழுதை சரி செய்தனர்.

அதன்பின்னர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தை வந்தடைந்தன. சிக்னல் பழுதால் 2 மணி நேரத்துக்கும் மேலாக எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் அவற்றில் இருந்த பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இதுகுறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

தீயில் எரிந்தன

சென்னை எழும்பூர்–சேத்துப்பட்டு இடையே உள்ள பகுதியில் தண்டவாளம் அருகே உள்ள செடிகளை அப்புறப்படுத்தி அதை தீ வைத்து எரிக்கும் பணி நடைபெற்றது. அப்போது சிக்னலுக்காக போடப்பட்டிருந்த வயர்கள் தீயில் எரிந்தன.

இதனால் எழும்பூர்–சேத்துப்பட்டு இடையே உள்ள பகுதியில் சிக்னல் கோளாறு ஏற்பட்டது. வயர்கள் எரிந்ததால் தான் சிக்னல் கோளாறை சரிசெய்ய 2 மணி நேரத்திற்கும் மேல் ஆகிவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்