கல்பாக்கம் அருகே பஸ்–கார் மோதல்; 2 பேர் பலி சென்னையை சேர்ந்தவர்கள்

கல்பாக்கம் அருகே பஸ்–கார் மோதிய விபத்தில் சென்னையை சேர்ந்த 2 பேர் பலியானார்கள்.

Update: 2017-04-01 22:30 GMT

கல்பாக்கம்,

சென்னை கொடுங்கையூரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 44). கட்டிட காண்டிராக்டரான இவர் நேற்று முன்தினம் தனது நண்பரான கொளத்தூர் பகுதியை சேர்ந்த சந்துரு (31) என்பவருடன் தனது காரில் புதுச்சேரி சென்றார். பின்னர் அங்கிருந்து இருவரும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். காரை செந்தில்குமார் ஓட்டிச்சென்றார்.

மதியம் 2½ மணியளவில் கல்பாக்கத்தை அடுத்த வடபட்டினம் கிராமத்தில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற மற்றொரு காரை அவர்களுடைய கார் முந்தி செல்ல முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த காரின் பின்புறம் செந்தில்குமாரின் கார் மோதி நிலைதடுமாறி திரும்பியது. அப்போது சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற அரசு பஸ் செந்தில்குமாரின் கார் மீது பலமாக மோதியது.

2 பேர் பலி

இதில் கார் அப்பளம் போல நொறுங்கியது. காரில் பயணம் செய்த செந்தில்குமார், சந்துரு இருவரும் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்த கல்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான்விக்டர் மற்றும் போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று செந்தில்குமார், சந்துரு இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து கூவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்