2 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை ரூ.5 கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கம்

குமரி மாவட்டத்தில் 2 ஆயிரம் லாரிகள் நேற்று ஓடவில்லை. இதனால் ரூ.5 கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கமடைந்தன.

Update: 2017-04-01 23:00 GMT
நாகர்கோவில்,


வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் உயர்த்தப்பட்டுள்ள கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், பெட்ரோல்– டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரியை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 30–ந் தேதி முதல் தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வேலைநிறுத்தம் தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் தொடங்கி நடந்து வருகிறது.

ஆனாலும் குமரி மாவட்டத்தில் லாரிகள் வழக்கம்போல் இயங்கி வந்தன. இதனால் குமரி மாவட்டத்தில் எவ்வித பாதிப்பும் இல்லாமல் இருந்தது. இந்தநிலையில் தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்க வேலைநிறுத்தத்துக்கு ஆதரவாக குமரி மாவட்ட லாரி உரிமையாளர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக சங்க மாவட்ட செயலாளர் மனோகரன் அறிவித்திருந்தார். அதன்படி நேற்று குமரி மாவட்டத்தில் பெரும்பாலான லாரிகள் ஓடவில்லை.

பாதிப்பு


இதனால் குமரி மாவட்டத்தில் இருந்து உள் மாவட்டத்துக்குள்ளும், குமரி மாவட்டத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கும் சரக்கு போக்குவரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

இதனால் ரப்பர், தேங்காய், உப்பு, விறகு, பலாப்பழங்கள் உள்ளிட்ட பல்வேறு உற்பத்தி பொருட்கள் தேக்கமடைந்தன.

இதுதொடர்பாக குமரி மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் மனோகரன் கூறியதாவது:–

ரூ.5 கோடி


குமரி மாவட்டத்தில் மொத்தம் 4,750 சரக்கு லாரிகளும், 3,200 சிறிய வகையிலான சரக்கு வாகனங்களும் இயங்கி வருகின்றன. இதில் குமரி மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் மட்டும் 2,580 லாரிகள் உள்ளன. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் நேற்று ஓடவில்லை. வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு சென்ற லாரிகள் அங்கேயே சரக்கு ஏற்றாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதேபோல் குமரி மாவட்டத்திலும் லாரிகள் அவரவர்களது ஷெட்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

எங்களது வேலை நிறுத்த போராட்டத்தால் குமரி மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஏற்றிச் செல்லப்படும் ரப்பர், தேங்காய், உப்பு, விறகு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தேங்கிக் கிடக்கின்றன. நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.5 கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கமடைந்து உள்ளன.

மேலும் செய்திகள்