குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் மினி பஸ் சிறைப்பிடிப்பு

இரணியல் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினிபஸ் சிறைப்பிடிக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

Update: 2017-04-01 23:00 GMT
அழகியமண்டபம்,

இரணியலை அடுத்த நுள்ளிவிளை பேரூராட்சிக்கு உள்பட்ட புளியன்விளை பகுதியில் கடந்த சில வாரங்களாக குடிநீர் வினியோகம் நடைபெறவில்லை எனக்கூறப்படுகிறது.

இதனால் அந்த பகுதி மக்கள் தண்ணீரின்றி பெரும் தவிப்புக்கு ஆளானார்கள். இதுபற்றி நுள்ளிவிளை ஊராட்சிக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் தகவல் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத்தெரிகிறது. இதனால் அதிருப்தி அடைந்த மக்கள் நேற்று காலை கண்டன்விளையில் இருந்து வில்லுக்குறி செல்லும் இணைப்பு சாலையில் திடீரென திரண்டனர். அவர்களுடன் அப்பகுதி பெண்கள் கைகளில் காலி குடங்களுடன் வந்தனர்.

சாலைமறியல் போராட்டம்

அவர்கள் குடிநீர் வழங்க கோரி கோ‌ஷம் போட்டனர். அப்போது ஆண்களும், பெண்களும் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அப்போது அந்த வழியாக இரணியலில் இருந்து வில்லுக்குறி செல்லும் மினி பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்சை பொது மக்கள் சிறைபிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த இரணியல் இன்ஸ்பெக்டர் சுதேசன், சப்–இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு  ஏற்பட்டதை தொடர்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்