ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி 100 பேர் கைது

திருவாரூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடந்தது. இதில் கலந்து கொண்ட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-04-01 23:00 GMT
திருவாரூர்,

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்த போவதாக தமிழக நிலம், நீர் பாதுகாப்பு கூட்டமைப்பு அறிவித்து இருந்தது. இதற்கு போலீசார் அனுமதி அளிக்க மறுத்து விட்டனர். இதனால் தடையை மீறி பேரணி நடத்த தமிழக நிலம், நீர் பாதுகாப்பு கூட்டமைப்பு முடிவு செய்தது. அதன்படி திருவாரூரில் நேற்று பேரணி நடைபெற்றது. பேரணியின் தொடக்க நிகழ்ச்சி திருவாரூர் நகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தமிழக நிலம், நீர் பாதுகாப்பு கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வரதராஜன் தலைமை தாங்கினார். மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் அப்துல்சமீது பேரணியை தொடங்கி வைத்தார். இதில் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இரணியன், இணைச்செயலாளர் வேலுகுபேந்திரன், பேரழிவுக்கு எதிரான பேரியக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் லெனின், ஜனநாயக குடியரசு கட்சி மாநில பொதுச்செயலாளர் பழனி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மண்டல தலைவர் அப்துல்லத்தீப், இளைஞர்கள் அமைப்பின் நிர்வாகிகள் ராஜா, ஜெய்சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

100 பேர் கைது

தடையை மீறி பேரணி நடத்துவதை அறிந்த திருவாரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாறன், இன்ஸ்பெக்டர்கள் ராஜா, செந்தில்குமார் மற்றும் போலீசார் திருவாரூர் நகராட்சி அலுவலகம் அருகே தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த தடுப்புகளை தாண்டி பேரணி நடைபெற்றது. இதனால் போலீசாருக்கும், பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பேரணி சென்றவர்களை திருவாரூர் பனகல் சாலை அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது பேரணியில் கலந்து கொண்டவர்கள், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். தடையை மீறியதையடுத்து பேரணியில் கலந்து கொண்ட 100 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

மேலும் செய்திகள்