ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர் திருவிழா

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்திருவிழா கொடியேற்றம் நேற்று நடைபெற்றது.

Update: 2017-04-01 22:45 GMT
ஸ்ரீரங்கம்,

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து அதிகாலை 2.45 மணிக்கு புறப்பட்டு கொடியேற்ற மண்டபத்திற்கு 3 மணிக்கு வந்து சேர்ந்தார். பின்னர் சிறப்பு பூஜைகளுடன் 4.15 மணி முதல் 5 மணிக்குள் மீன லக்னத்தில் கொடியேற்றப்பட்டது.

நேற்று மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்தார். 2-ம் நாளான இன்று (ஞாயிற்றுக் கிழமை) காலை 7.30 மணிக்கு கருடமண்டபத்தில் எழுந்தருளுகிறார். 3-ம் நாளான நாளை (திங்கட்கிழமை) நம்பெருமாள் பல்லக்கில் புறப்பட்டு மேலூர் வழியாக ஜீயபுரம் செல்லும் வழியில் வழிநடை உபயங்கள் கண்டருளி ஜீயபுரம் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

நெல்லளவு கண்டருளுகிறார்

4-ம் நாளான 4-ந் தேதி கருடசேவையும், 5-ம் நாளான 5-ந் தேதி நம்பெருமாள் காலை சேஷவாகனத்திலும், மாலை கற்பவிருட்ச வாகனத்திலும் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து காட்சியளிக்கின்றார். 6-ந் தேதி நம்பெருமாள் வழிநடை உபயங்கள் கண்டருளி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் மகாஜன மண்டபத்தில் கமலவல்லி நாச்சியாருடன் சேர்த்தி சேவை கண்டருளுகிறார். 7-ந் தேதி நம்பெருமாள் திருச்சிவிகையில் புறப்பட்டு கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளுகிறார். 8-ந் தேதி நம்பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து பங்குனி ரதம் முன் வையாளி கண்டருளுகிறார்.

தேரோட்டம்

9-ந் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திர தினத்தன்று ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் தாயார் சேர்த்தி சேவை நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான 10-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. அன்று அதிகாலை 3.30 மணிக்கு ஏகாந்தசேவை முடிந்த பின்னர் நம்பெருமாள் தாயார் சன்னதியில் இருந்து புறப்பட்டு கோரதத்துக்கு (தேருக்கு) வருகிறார். பின்னர் காலை 7.15 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. 11-ந் தேதி ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அன்றுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. 

மேலும் செய்திகள்