பிரதமர், கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம் உருவபொம்மைகளை எரிக்க முயன்ற 70 பேர் கைது

பிரதமர், கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் அவர்களது உருவ பொம்மைகளை எரிக்க முயன்ற 70 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-04-01 23:00 GMT

புதுச்சேரி,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வறட்சி நிவாரணம், கடன் தள்ளுபடி, காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை புறக்கணிக்கும் மத்திய அரசை கண்டித்தும், கவர்னர் கிரண்பெடியை கண்டித்தும் புதுச்சேரி மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நேற்று காலை பழைய பஸ்நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு இயக்கத்தின் பொதுசெயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சுரேஷ், காளிதாஸ், எத்திராஜ், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென பிரதமர் மோடி, கவர்னர் கிரண்பெடி ஆகியோரின் உருவ பொம்மைகளை எரிக்க முயற்சி செய்தனர்.

71 பேர் கைது

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைதொடர்ந்து

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர் மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தினரை போலீசார் கைது செய்ய முயன்றபோது சிலர் மறைமலை அடிகள் சாலை, அண்ணா சாலை ஆகிய பகுதியை நோக்கி ஓடினர். அவர்களை பிடிக்க போலீசார் விரட்டிச் சென்றனர். அங்கு அவர்கள் மறைத்து வைத்திருந்த உருவ பொம்மைகளை எடுத்து எரிக்க முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து உருவ பொம்மைகளை பறிமுதல் செய்தனர். இதன்பின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 71 பேரை போலீசார் கைது செய்தனர். போலீசாருக்கு போக்கு காட்டி அவர்கள் இங்கும் அங்குமாக ஓடியதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

மேலும் செய்திகள்