தாராபுரத்தில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தாராபுரத்தில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.;
தாராபுரம்,
தாராபுரத்தில் தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் சார்பில், மத்திய அரசின் தமிழக விவசாயிகளின் விரோத போக்கை கண்டித்து, பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் ஏ.காளிமுத்து தலைமை தாங்கினார்.
பொதுச்செயலாளர் சுப்பிரமணியம், வட்டார தலைவர் கதிர்வேல், உழவர் உழைப்பாளர் கட்சியின் மாவட்ட செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத்தலைவர் பழனிச்சாமி, அமராவதி நதிநீர் பாதுகாப்பு இயக்க செயலாளர் லிங்கம்சின்னசாமி, காய்கறி உற்பத்தியாளர் சங்க செயலாளர் வேலுச்சாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கோரிக்கைகள்ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் தேசிய வங்கியில் வாங்கிய அனைத்து கடன்களையும், மத்திய அரசு தள்ளுபடி செய்யவேண்டும். தற்கொலை செய்து கொண்ட 300–க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடாக மத்திய, மாநில அரசுகள் தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் தண்ணீரை, அந்தந்த மாநிலங்கள் தடுத்து தடுப்பணைகள் கட்டுவதற்கு அனுமதிக்கக்கூடாது.
தமிழக அரசு வறட்சி நிவாரணமாக கேட்ட ரூ.39 ஆயிரம் கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளையும் உடனடியாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை, பிரதமர் மோடி அழைத்து பேசி பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும். தாமதிக்கும் பட்சத்தில் தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் டெல்லி சென்று போராடும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.