அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாக பொதுமக்கள் அறிவிப்பு
உத்தமபாளையம் பேரூராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாக பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.
உத்தமபாளையம்,
தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. பி.டி.ஆர்.காலனி, பாதர்கான்பாளையம், மின்வாரியநகர், இந்திராநகர், பாறைமேட்டுத்தெரு, கலிமேட்டுப்பட்டி, கோவிந்தசாமி கோவில்தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வார்டு பகுதியில் உள்ளன. இங்கு சுமார் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.
உத்தமபாளையத்தில் ஆர்.டி.ஓ.அலுவலகம், தாலுகா அலுவலகம் என பல்வேறு அரசு அலுவலகங்களும், தாலுகா அரசு மருத்துவமனையும் செயல்பட்டு வருகின்றன. வார்டு பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்படவில்லை என்ற புகார் பரவலாக உள்ளது.
நோய் பரவும் அபாயம்குறிப்பாக பாறைமேட்டுத்தெரு, கோவிந்தசாமி கோவில் தெரு பகுதியில் குடிநீர், சாக்கடை கால்வாய், கழிப்பறை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீர் சாலைகளில் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் இரவு நேரங்களில் கொசுக்கடியால் பொதுமக்கள் தூக்கத்தை தொலைத்து வருகின்றனர். இதுபோதாதென்று தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள சாலையில் போதிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. ஒரு முறை மழை பெய்தால் கூட சாலைகள் முழுக்க சேறும், சகதியுமாக மாறி விடுகிறது.
போராட்டம் அறிவிப்புஅந்த வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு சாலை மாறி விடுகிறது. இரவு நேரங்களில் தெரு விளக்குகளும் முறையாக எரிவதில்லை. இதன் காரணமாக தெருக்களில் நடந்து செல்லவே மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே வார்டு பகுதிகளில் போதிய அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க பேரூராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து வார்டு பகுதி மக்கள் கூறும்போது, ‘ஊராட்சி பகுதியில் அனைத்து சாலைகளும் சிமெண்டு சாலையாகவும், தார்சாலையாகவும் காட்சி அளிக்கிறது. ஆனால் பேரூராட்சி பகுதியில் இருந்தும், இங்கு அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. சாலை, சாக்கடை கால்வாய், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க பேரூராட்சி நிர்வாகத்தில் மனு கொடுத்தோம்.
எனினும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே குடிநீர், சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காததை கண்டித்து பொதுமக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்த உள்ளோம்’ என்றனர்.