சித்தூர் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் நடந்த விபத்துகளில் 2 பேர் பலி
சித்தூர் மாவட்டம் குரபலகோட்டா மண்டலம் பி.சி.காலனியைச் சேர்ந்தவர் ரெட்டிபாஷா (வயது 58).
ஸ்ரீகாளஹஸ்தி,
சித்தூர் மாவட்டம் குரபலகோட்டா மண்டலம் பி.சி.காலனியைச் சேர்ந்தவர் ரெட்டிபாஷா (வயது 58). இவர், முலகலசெருவு மண்டலம் சீக்கட்டிமானுப்பள்ளியில் உள்ள தன்னுடைய மகன் நவுஜீராவை பார்ப்பதற்காக மனைவி ஜெஹிராவுடன் நேற்று முன்தினம் பஸ்சில் சென்றார். அங்கு, மகளை பார்த்து விட்டு திரும்புவதற்காக வீட்டில் இருந்து பஸ் நிறுத்தத்துக்கு நடந்து வந்தார்.
அப்போது அந்த வழியாக கதிரியில் இருந்து மதனப்பள்ளியை நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு அரசு பஸ், திடீரென ரெட்டிபாஷா மீது மோதியது. அதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக மதனப்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி ரெட்டிபாஷா பரிதாபமாக செத்தார். இதுகுறித்து முலகலசெருவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல் மதனப்பள்ளி மண்டலம் பாதபோலு சுகாதார நிலையம் அருகே சாலை ஓரத்தில் நின்றிருந்த அடையாளம் தெரியாத ஒருவரை, அந்த வழியாக சென்ற லாரி மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தார். இறந்தவர் நீல நிறத்தில் சட்டையும், வெள்ளை நிறத்தில் வேட்டியும் அணிந்திருந்தார். அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதுபற்றி மதனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.