அரக்கோணம் ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் விரிசல் மாற்றுபாதையில் ரெயில்கள் சென்றன

அரக்கோணம் ரெயில் நிலையம் 8 பிளாட்பாரங்கள் கொண்ட பெரிய ரெயில் நிலையமாக இருந்து வருகிறது.

Update: 2017-04-01 23:15 GMT

அரக்கோணம்,

அரக்கோணம் ரெயில் நிலையம் 8 பிளாட்பாரங்கள் கொண்ட பெரிய ரெயில் நிலையமாக இருந்து வருகிறது. தினமும் ஏராளமான எக்ஸ்பிரஸ் ரெயில்கள், மின்சார ரெயில்கள் சென்னை, காட்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகிறது. நேற்று காலை 7.45 மணி அளவில் ரெயில்வே ஊழியர்கள் 2–வது பிளாட்பாரத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, தண்டவாளத்தில் விரிசல் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து ரெயில் நிலைய அதிகாரிகளுக்கும், ரெயில்வே கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து 2–வது பிளாட்பாரம் வழியாக செல்லக்கூடிய அனைத்து ரெயில்களையும் அதிகாரிகள் மாற்று பாதையில் அனுப்பி வைக்க உத்தரவிட்டனர். பின்னர் ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள், சிப்பந்திகள் சம்பவ இடத்துக்கு சென்று தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரம் போராடி தண்டவாள விரிசலை சரிசெய்தனர்.

பின்னர் 8.45 மணிக்கு மேல் 2–வது பிளாட்பாரம் வழியாக ரெயில்கள் இயக்கப்பட்டன.

மேலும் செய்திகள்