மேல புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் பங்குனி உத்திர திருவிழா

மேல புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2017-04-01 20:15 GMT

தென்திருப்பேரை,

மேல புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பங்குனி உத்திர திருவிழா

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் குரும்பூர் அருகே உள்ள மேலபுதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலும் ஒன்றாகும். கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும்.

இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலையில் கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழா நாட்களில் தினமும் இரவில் அய்யனார் சப்பரத்தில் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார். தினமும் சமய சொற்பொழிவு, கலைநிகழ்ச்சி நடக்கிறது.

அய்யனார் வீதி உலா

6–ம் திருநாளான 5–ந் தேதி (புதன்கிழமை) காலையில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. மதியம் 1 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

10–ம் திருநாளான 9–ந் தேதி காலையில் சிறப்பு ஹோமம், அபிஷேகம் நடக்கிறது. காலை 8 மணிக்கு பங்குனி உத்திர கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 11.30 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடக்கிறது. மதியம் 2 மணிக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுகின்றனர்.

இரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடக்கிறது. இரவு 1 மணிக்கு அய்யனார் கற்பக பொன் சப்பரத்தில் எழுந்தருளி, மேல புதுக்குடி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


மேலும் செய்திகள்