விருத்தாசலத்தில் நள்ளிரவில் தீ விபத்து 2 கடைகள் எரிந்து சாம்பல்; ரூ.5 லட்சம் பொருட்கள் நாசம்

விருத்தாசலத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 கடைகள் எரிந்து சாம்பலானது.;

Update: 2017-04-01 23:00 GMT

விருத்தாசலம்

விருத்தாசலம் அருகே உள்ள குப்பநத்தம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் அரிபுத்திரன் (வயது 45). இவர் விருத்தாசலம் பெரியார் நகரில் பந்தல் அமைக்க பயன்படும் பொருட்களை விற்பனை செய்யும் கடை வைத்து இருக்கிறார். நேற்று முன்தினம் இரவு இவர் வியாபாரம் முடிந்ததும் வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் விருத்தாசலம் போலீசார் நள்ளிரவில் பெரியார் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அரிபுத்திரனின் கடையில் தீ விபத்து ஏற்பட்டு, அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் தீ பிடித்து எரிந்தது.

ரூ.5 லட்சம் பொருட்கள் நாசம்

இதை பார்த்த போலீசார் உடனடியாக விருத்தாசலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் 2 வாகனங்களில் விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இருப்பினும் கொழுந்து விட்டு எரிந்த தீ, அருகில் இருந்த விருத்தாசலம் டிரைவர் குடியிருப்பை சேர்ந்த ரங்கராஜ் (50) என்பவரது காய்கறி கடை மற்றும் சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தின் மீதும் பரவி எரிந்தது. இதனால் நீண்ட நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து, கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் அரிபுத்திரன் மற்றும் ரங்கராஜிக்கு சொந்தமான கடைகள் எரிந்து சேதமானது. இதன் சேதமதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்