மாரநாடு கருப்பணசாமி கோவில் களரி திருவிழா பொங்கல் வைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

திருப்புவனம் அருகே பிரசித்தி பெற்ற மாரநாடு கருப்பணசாமி கோவில் களரி திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

Update: 2017-04-01 22:45 GMT

திருப்புவனம்

திருப்புவனம் அருகே உள்ளது மாரநாடு கிராமம். இங்குள்ள கருப்பணசாமி கோவில் தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் களரி திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று முன்தினம் காலையில் தொடங்கி நேற்று காலை வரை நடைபெற்றது. விழாவையொட்டி பக்தர்கள் கோவிலுக்கு உள்ளேயும், வெளியேயும் தேங்காய், பழங்களை வைத்து விளக்கேற்றியும், பொங்கல் வைத்தும் கருப்பண சாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் பக்தர்கள் பரிகாரம் செய்வதற்காக படையல் வைத்து பீட பூஜை வழிபாடு நடத்தினர். விழாவில் சிறப்பாக பக்தர்கள் வேண்டுதல் மாலைகளை கருப்பண சாமி கோவில் முன்பு உள்ள கல் தூணிற்கு போட்டனர்.

வாண வேடிக்கை

முன்னதாக கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த களரி பொட்டலில் நள்ளிரவு முழுவதும் சாமியாட்டம் நடைபெற்றது. கல்தூணில் போடப்பட்ட மாலைகள் மலைப்போல் குவிந்து கிடந்தன. மேலும் இந்த மாலைகளை எடுத்து வீடுகளில் வைத்தால் நல்லது நடக்கும் என்பது ஐதீகம். இதனால் பக்தர்கள் போட்டிபோட்டு மாலைகளை தங்கள் வீடுகளுக்கு எடுத்து சென்றனர். விழா முடிவில் வாண வேடிக்கை நடைபெற்றது.

திருவிழாவையொட்டி மதுரை, திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மாரநாடு சீமை கிராமத்தினர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் செய்திருந்தனர். முன்னதாக பக்தர்களின் வசதிக்காக சிவகங்கை, மானாமதுரை, மதுரை, திருப்புவனம் ஆகிய சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளை துணை போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கரன், முத்துக்குமார், முகமது பரக்கத்துல்லா மற்றும் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்