திருப்பத்தூர் அருகே சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணியில் பள்ளி மாணவர்கள்
மதுரை ஐகோர்ட்டு சமீபத்தில் ஒரு உத்தரவு பிறப்பித்தது.
திருப்பத்தூர்,
மதுரை ஐகோர்ட்டு சமீபத்தில் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில் தமிழகத்தில் நிலத்தடி நீரை உறிஞ்சி விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்றும், இதுகுறித்த அறிக்கையை அந்தந்த மாவட்ட கலெக்டர் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. மேலும் இப்பணியில் அரசு மட்டுமின்றி பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் ஒரு பகுதியாக திருப்பத்தூர் கிறிஸ்துராஜா மெட்ரிக் பள்ளியின் பசுமை படை இயக்கத்தின் சார்பில் மாணவர்கள் முகாம் நடத்தி சீமைக்ருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அதன்படி திருப்பத்தூர் வட்டாட்சியர் கந்தசாமி தலைமையில் சுமார் 50–க்கும் மேற்பட்ட மாணவர்கள், காரையூர் கண்மாய் பகுதியில் உள்ள சீமைக்கருவேல செடி மற்றும் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பெரிய மரங்கள் ஜே.சி.பி. உதவியுடனும், செடிகள் மாணவர்களாலும் அகற்றப்பட்டன. இம்முகாமிற்கு பள்ளி நிறுவனர் விக்டர், பள்ளி முதல்வர் ரூபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர்களின் இந்த கூட்டு முயற்சியினை வட்டாட்சியர் கந்தசாமி பாராட்டினார். மேலும் இந்த முகாமில் மண்டல துணை வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.