எல்லா வி‌ஷயங்களையும் வெளியில் பேச முடியாது: யாராக இருந்தாலும் அவரவர் எல்லைக்குள் செயல்பட வேண்டும்

எல்லா வி‌ஷயங்களையும் வெளியில் பேச முடியாது: யாராக இருந்தாலும் அவரவர் எல்லைக்குள் செயல்பட வேண்டும் கவர்னர் விவகாரத்தில் நாராயணசாமி திட்டவட்டம்

Update: 2017-03-31 23:15 GMT

புதுச்சேரி,

எல்லா வி‌ஷயங்களையும் வெளியில் பேச முடியாது. யாராக இருந்தாலும் அவரவர் எல்லைக்குள் செயல்பட வேண்டும் என்று கவர்னர் விவகாரம் குறித்து முதல்–அமைச்சர் நாராயணசாமி கருத்து தெரிவித்தார்.

புதுவை சட்டசபையில் கவர்னர் தொடர்பாக தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. பிரச்சினையை எழுப்பினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:–

கவர்னர் முட்டுக்கட்டை

சிவா (தி.மு.க.):– புதுவை நகராட்சி ஆணையர் குறித்து பலமுறை நான் புகார் கூறினேன். அப்போது நடவடிக்கை ஏதும் இல்லை. அவரை மாற்ற உங்களுக்கு உள்ள அதிகாரத்தை செயல்படுத்த முடியவில்லையே அது ஏன்? கடந்த ஆட்சிக்காலத்தில் இருந்த அதிகாரிகள்தான் தற்போதும் அதிகாரத்தில் உள்ளனர். அதிகாரிகளை மாற்ற கவர்னர் முட்டுக்கட்டையாக இருந்தால் வாருங்கள் அனைவரும் டெல்லி செல்வோம். அவரை மாற்ற முடியவில்லை என்றால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வருவோம். ஒரு அதிகாரியை மாற்றவே இந்தநிலை என்றால் இன்னும் எத்தனையோ அதிகாரிகள் உள்ளனர். அவர்களை மாற்றவும் சட்டமன்றத்தை கூட்ட வேண்டுமா?

அன்பழகன் (அ.தி.மு.க.):– நீங்கள் சொல்வதை அரசு கேட்காவிட்டால் அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுங்கள் பார்ப்போம்.

சிவா:– கவர்னரை மாற்ற வேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டு வாருங்கள்.

அதிகாரத்தில் தலையீடு

முதல்–அமைச்சர் நாராயணசாமி:– சிவா எம்.எல்.ஏ. அந்த அதிகாரியைப்பற்றி புகார் கூறியுள்ளார். நிர்வாகத்தில் சில சிக்கல்கள் இருக்கும். சிலவற்றை வெளியே சொல்ல முடியும். சிலவற்றை சொல்ல முடியாது. யாராக இருந்தாலும் அவரவர் எல்லைக்குள் செயல்பட்டால் நல்லது. நாங்கள் மற்றவர்களின் அதிகாரத்தில் தலையிடுவது கிடையாது.

அனந்தராமன் (காங்):– சிவா எம்.எல்.ஏ. கவர்னரை திரும்பப்பெறக்கோரி தீர்மானம் கொண்டுவர சொல்கிறார்.

நாராயணசாமி:– இந்திய அரசியலமைப்பு சட்டம் பற்றி நமக்கு தெரியும். யூனியன் பிரதேச சட்டமன்ற விதிமுறைகள் பற்றியும் தெரியும். கவர்னர் இந்த அரசின் அங்கம். அவரது நிர்வாகம் பற்றி இந்த அவையில் பேசலாம். ஆனால் மற்ற வி‌ஷயங்கள் பற்றி இங்கு பேசக்கூடாது.

சிவா:– நான் எம்.எல்.ஏ.வாக இருந்துள்ள காலங்களில் 9 கவர்னர்களை பார்த்துள்ளேன். இவர் எல்லைமீறி போகிறார்.

அன்பழகன்:– புதுவை மாநில வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் கவர்னரை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்.

ஜனாதிபதிக்கு கடிதம்

லட்சுமிநாராயணன் (காங்):– கவர்னரை திரும்பப்பெறும் தீர்மானத்தை நிறைவேற்ற சட்டசிக்கல் இருந்தால் அனைவரது கருத்தையும் சபாநாயகர் மத்திய அரசுக்கும், ஜனாதிபதிக்கும் கடிதமாக எழுதி அனுப்பி வைக்கலாம்.

சபாநாயகர் வைத்திலிங்கம்:– ஒரு அதிகாரியின் நடவடிக்கை பற்றி இந்த அவையில் பேசினார்கள். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரியை மாற்றும் அவை இது கிடையாது.

சிவா:– கவர்னர் அதிகாரியை தூண்டிவிட்டதால்தான் பிரச்சினை.

சபாநாயகர்:– ஒவ்வொரு பஞ்சாயத்திலும் எம்.எல்.ஏ.க்கள் உறுப்பினர்கள். அவர்களின் உரிமை பாதிக்கப்படக்கூடாது. ஒவ்வொரு 3 மாதத்துக்கு ஒருமுறையும் கவுன்சில் கூட்டத்தை கூட்டி எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனையை பெற்று அதனை அமைச்சர்களுக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுங்கள். இப்போது நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது என்று அமைச்சர்களுக்குக்கூட தெரிவதில்லை.

அமைச்சர் நமச்சிவாயம்:– உங்களது ஆலோசனையை ஏற்று செயல்பட அரசு தயாராக உள்ளது.

சபாநாயகர்:– கவர்னரைப்பற்றி உங்கள் குறைகளை தயார் செய்யுங்கள்.

சிவா:– அமைச்சர்கள்தான் பெருமளவு குறைகூறுகிறார்கள்.

சேற்றை வீசிய வரலாறு

நாராயணசாமி:– இந்த அதிகாரப்போட்டி கடந்த காலங்களிலும் இருந்துள்ளது. அதைப்பற்றி இங்கு விரிவாக கூற விரும்பவில்லை.

அன்பழகன்:– கவர்னர் மீது சேற்றை வீசிய வரலாறும் இங்கு உண்டு.

இவ்வாறு விவாதம் நடந்தது.

மேலும் செய்திகள்