கொடைக்கானல் வனப்பகுதியில் தீப்பிடித்தது வனத்துறையினர் போராடி அணைத்தனர்

கொடைக்கானல் வனப்பகுதியில் பல இடங்களில் தீப்பிடித்தது. அந்த பகுதியில் தீ மேலும் பரவ விடாமல் வனத்துறையினர் பல மணி நேரம் போராடி அணைத்து வருகின்றனர்.

Update: 2017-03-31 22:15 GMT

 

கொடைக்கானல்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நிலவி வரும் பருவநிலை மாற்றம் காரணமாக பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் காணப்படுகிறது. இரவு நேரங்களில் குளிர் அதிகமாக உள்ளது. கடந்த சில தினங்களாக கொடைக்கானல் வனப்பகுதிகளிலும், தனியார் தோட்டங்களிலும் அவ்வப்போது தீப்பிடித்து வருகிறது. இதனை வனத்துறையினர் விரைந்து சென்று அணைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கொடைக்கானலை அடுத்த அட்டுவம்பட்டியில் அன்னைதெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் அருகேயுள்ள வனப்பகுதியில் தீப்பிடித்தது. அது நேற்று பகலில் எரிந்து கொண்டே இருந்தது. தகவலறிந்த வனத்துறையினர் அங்கு சென்று பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தீயை அணைக்கும் முயற்சி

இதே போல் நகரின் அருகேயுள்ள வெங்காயப்பாறை பகுதியில் தூர்தர்‌ஷன் ஒளிப்பரப்பு நிலைய கட்டிடத்தின் பின்புறம் இருக்கும் வனப்பகுதி மற்றும் தனியார் தோட்டங்களிலும் நேற்று காலையில் தீப்பிடித்தது. இதனால் அப்பகுதிகளில் புகை மண்டலமாக காட்சி அளித்தது. தகவலறிந்த வனத்துறையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் தீத்தடுப்பு குழுவினர் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் கடும் வெப்பம் காரணமாக தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் அவர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

மேலும் செய்திகள்