தாராபுரம் அருகே,குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்–தர்ணா

தாராபுரம் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்–தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2017-03-31 22:30 GMT

தாராபுரம்,

தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குடிநீர் கேட்டு பல பகுதிகளில் பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அமராவதி ஆற்றில் குடிநீர் வரத்து இல்லாததால், குடிநீர் வழங்க முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் கிராம மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். நேற்றுமாலை குடிநீர் கேட்டு மடத்துப்பாளையத்தைச்சேர்ந்த கிராம பெண்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மடத்துப்பாளையத்தைச்சேர்ந்த பெண்கள் கூறியதாவது:– தொப்பம்பட்டி ஊராட்சியில் வெங்கிட்டிபாளையம், மடத்துப்பாளையம், சின்னையகவுண்டன்பாளையம், தொப்பம்பட்டி, ரங்கம்பாளையம், சகுனிபாளையம், தண்டாரபாளையம் என 10–க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இதில் 1000–க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். கால்நடைகள் பெருமளவில் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த ஊராட்சிக்கு அமராவதி கூட்டுக்குடிநீர் திடத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

போக்குவரத்து பாதிப்பு

ஆனால் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வழங்கப்படவில்லை. தற்போது கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளதால், இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது. ஆழ்குழாய் கிணறுகளில் குடிநீர் வற்றிவிட்டது. இதனால் குடிப்பதற்கு ஒரு குடம் குடிநீர் கிடைப்பதில்லை. இதனால் கிராமமக்கள் நாள்தோறும் அவதிப்படுகிறார்கள். அதிகாரிகளிடம் இதுகுறித்து புகார் அளித்தால் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. அதனால் குடிநீர் கேட்டு இப்பகுதி பெண்கள் சாலை மறியல் போராடத்தை நடத்தினோம் என்று கூறினார்கள்.

சாலை மறியல் போராட்டத்தால் தாராபுரம்–பூளவாடி சாலையில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் குறிப்பாக மாணவ–மாணவிகள் பாதிக்கப்பட்டார்கள். தகவல் அறிந்து தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனந்தநாயகி (பொறுப்பு) மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பெண்கள் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நேரில் வந்து இப்பகுதிக்கு குடிநீர் வழங்குவதாக உறுதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள்.

தர்ணா

சாலை மறியலால் பள்ளிக்குழந்தைகள் சிரமத்திற்கு உள்ளாகி இருப்பதை போலீசார் சுட்டிக்காட்டி, சாலை மறியலை கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர். அதை ஏற்றுக்கொண்ட பெண்கள், சாலை மறியலை கைவிட்டு, அருகே இருந்த ஊராட்சி அலுவலகத்தின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் வருவதற்கு கால தாமதம் ஏற்பட்டதால், மாலை 6 மணிக்கு தொடங்கிய போராட்டம் இரவு 9 மணி வரை நீடித்தது. அதன் பிறகு அதிகாரிகள் நேரில் வந்து குடிநீர் வழங்குவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து, பெண்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்