சோனியா காந்தியை தரக்குறைவாக பேசிய எச். ராஜாவை கண்டித்து காங்கிரசார் போராட்டம்
சோனியா காந்தியை தரக்குறைவாக பேசிய எச். ராஜாவை கண்டித்து காங்கிரசார் போராட்டம் திருச்சியில் 30 பேர் கைது
திருச்சி,
சோனியா காந்தியை தரக்குறைவாக பேசிய எச். ராஜாவை கண்டித்து திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் காங்கிரசார் போராட்டம் நடத்தினார்கள். திருச்சியில் நடந்த போராட்டத்தில் மாவட்ட தலைவர் உள்பட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
காங்கிரசார் போராட்டம்பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா, டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் பற்றி அளித்த பேட்டியில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் சோனியா காந்தியை தரக்குறைவாக விமர்சனம் செய்து பேசியதாக கூறி சென்னை சத்திய மூர்த்தி பவனில் நேற்று முன்தினம் காங்கிரசார் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள்.
திருச்சிஇந்நிலையில் எச். ராஜாவை கண்டித்து திருச்சி மாவட்ட காங்கிரஸ் அலுவலகமான அருணாசலம் மன்றத்தில் நேற்று காங்கிரசார் மாவட்ட தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ் தலைமையில் போராட்டம் நடத்துவதற்காக குவிந்தனர். பின்னர் அவர்கள் அலுவலகத்தை விட்டு வெளியே வந்து எச். ராஜாவின் உருவ படத்தை துடைப்பம் மற்றும் செருப்புகளால் அடித்தார்கள். அவருக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினார்கள். அப்போது போலீசார் துடைப்பம் மற்றும் செருப்புகளை அவர்களிடம் இருந்து பிடுங்கினார்கள். இதனால் அந்த பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
30 பேர் கைதுதெற்கு மாவட்ட தலைவர் ஆர்.சி. பாபு, மாநில துணை தலைவர்கள் சுப. சோமு, சுஜாதா, மாவட்ட நிர்வாகிகள் காளீஸ்வரன், சந்தான கிருஷ்ணன், வழக்கறிஞர் கோவிந்தராஜ், சிவாஜி சண்முகம் உள்பட பலர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஜெரோம் ஆரோக்கியராஜ் உள்பட 30 பேரை கோட்டை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினார்கள். ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த அவர்கள் அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.
லால்குடி
லால்குடியில் நடந்த போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ லோகாம்பாள் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் பரிமளாபிரபு, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் செல்லப்பா, வட்டார தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகரத்தலைவர் செல்வகுமார் நன்றி கூறினார்.
தா.பேட்டை
தா.பேட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் பழனியப்பன் தலைமை தாங்கினார். மீனரவணி வடக்கு மாவட்ட தலைவர் தனபால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மண்ணச்சநல்லூரில் வட்டார தலைவர் (மேற்கு) ரவிசங்கர் தலைமையில் ஆர்பாட்டம் நடந்தது. கிழக்கு வட்டார தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் ராஜப்பா, நகரத் தலைவர் முகுந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சமயபுரம் நகர தலைவர் தண்டபாணி நன்றி கூறினார்.