ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த விவசாயிகள் துரித மின் இணைப்பு பெற ‘ஆன்லைன்’ மூலம் விண்ணப்பிக்கலாம்

ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த விவசாயிகள் துரித மின் இணைப்பு பெற ‘ஆன்லைன்’ மூலம் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் பழனிசாமி தகவல்

Update: 2017-03-31 22:30 GMT

திருச்சி,

ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த விவசாயிகள் துரித மின் இணைப்பு பெற ‘ஆன்லைன்’ மூலம் விண்ணப்பிக்கலாம் என்று திருச்சி மாவட்ட கலெக்டர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–

ஆதிதிராவிடர் விவசாயிகள்

திருச்சி மாவட்டத்தில் தாட்கோ மூலம் வழங்கப்படும் துரித மின் இணைப்பு திட்டத்திற்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் ஆதிதிராவிடர் விவசாயியாக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். நிலம் விண்ணப்பதாரருக்கு சொந்தமாக இருப்பதுடன் அவரது பெயரில் நிலப்பட்டா இருக்க வேண்டும். மேலும் நிலத்தில் கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருக்க வேண்டும்.

ஆன்லைனில் பதிவு

துரித மின் இணைப்பு வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யும்போது விண்ணப்பதாரர் பற்றிய விவரங்களுடன் சாதிசான்று, குடும்பஅட்டை அல்லது இருப்பிட சான்று, வருமானச் சான்று, கல்வி தகுதி மற்றும் வயதிற்கான ஆதார சான்று(பள்ளி மாற்றுச்சான்று, வாக்காளர் அட்டை, பான் கார்டு, ஆதார் அட்டை, மதிப்பெண் சான்று) இவற்றில் ஏதேனும் ஒன்றை அதற்கான இடத்தில் குறிப்பிட்டு விண்ணப்பதாரருக்கு சொந்தமாக இருக்கும் நிலப்பட்டா மற்றும் சிட்டா அடங்கல் நகல் ‘அ‘ பதிவேடு நகல், நிலத்தில் கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டதற்கான நிலத்தின் வரைபடம், சர்வே எண், மின்வாரியத்தில் பதிவு செய்த ரசீது நகல் மற்றும் புகைப்படத்தையும் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

துரித மின் இணைப்பு வழங்கும் திட்டத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க உதவி தேவைப்படுபவர்களின் வசதிக்காக தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் ரூ.20 செலுத்தி விண்ணப்பிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த விவசாயிகள் துரித மின் இணைப்பு வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்