காவிரி குடிநீரை முறைகேடாக பயன்படுத்தும் தனிநபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயற்றி
காவிரி குடிநீரை முறைகேடாக பயன்படுத்தும் தனிநபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் செய்ய திரண்டதால் பரபரப்பு அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்குப்பின் கலைந்து சென்றனர்
வெள்ளியணை,
காவிரி குடிநீரை முறைகேடாக பயன்படுத்தும் தனிநபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் செய்ய திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதற்கு பின் அவர்கள் கலைந்து சென்றனர்.
பொதுமக்கள் அவதிகரூர் மாவட்டம் தாந்தோன்றி ஒன்றியம் வெள்ளியணை ஊராட்சி திருமுடிக்கவுண்டனூரில் 100–க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு ஊராட்சி சார்பில் ஆழ்குழாய் கிணறு அமைத்து அதில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நீர் நிரப்பி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சியில் ஆழ்குழாய் கிணற்றில் நீர்மட்டம் குறைந்து, போதுமான அளவு குடிநீர் பெற முடியாமல் அப்பகுதி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதை தொடர்ந்து முனியப்பன் கோவில் பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்டு அடைப்பு ஏற்பட்டதால் கைவிடப்பட்ட ஆழ்குழாய் கிணற்றின் அடைப்பை சரி செய்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு நீர் கொண்டு செல்வதற்கான குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.
விசாரணைகுழாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் அப்பகுதியை சேர்ந்த தனி நபர் ஒருவர் காவிரி குடிநீர் குழாயில் இருந்து தனது தோட்டத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் குழாயை கண்டுபிடித்தனர். இதையடுத்து காவிரி குடிநீரை முறைகேடாக பயன்படுத்தும் தனிநபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் செய்ய திரண்டனர். இது குறித்து தகவல் அறிந்த வெள்ளியணை போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் மங்கையற்கரசி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து முறைகேடான இணைப்பு ஏற்படுத்தியவரை அழைத்து இணைப்பை துண்டிக்க அறிவுறுத்தினர். இதையடுத்து அவர் இணைப்பை துண்டித்துக்கொண்டார். பின்னர் பொதுமக்கள் மறியல் செய்யும் எண்ணத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.