தார்வார் நகரில் பயங்கரம் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

தார்வாரில் நகரில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2017-03-31 21:00 GMT

உப்பள்ளி,

தார்வாரில் நகரில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

ரியல் எஸ்டேட் அதிபர்

விஜயாப்புராவை சேர்ந்தவர் முகமது உசேன் (வயது 32). ரியல் எஸ்டேட் அதிபர். இவர் தார்வார் ஜென்னத் நகர் பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு முகமது உசேனின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் எதிர்முனையில் பேசிய நபர், முகமது உசேனிடம் பணம் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. ஆனால் அதற்கு முகமது உசேன் மறுத்துள்ளார். இதனால் எதிர்முனையில் பேசிய மர்மநபர், முகமது உசேனை கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாக தெரிகிறது.

இதன்காரணமாக பயந்த முகமது உசேன் கடந்த 10 நாட்களாக விஜயாப்புராவுக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் தார்வாருக்கு திரும்பி வந்தார்.

வெட்டிக் கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் முகமது உசேன் தார்வார் லட்சுமி நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் முகமது உசேனை சரமாரியாக வெட்டினார்கள். இதில் கீழே சரிந்து விழுந்த முகமது உசேன் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இந்த கொலையை பார்த்த அந்தப்பகுதிகளில் இருந்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் துணை போலீஸ் கமி‌ஷனர் ஜெனேந்திர கனகாவி, உதவி போலீஸ் கமி‌ஷனர் வாசுதேவ நாயக் மற்றும் வித்யாநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

தனிப்படை அமைப்பு

பின்னர் கொலையான முகமது உசேனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தார்வார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரை கொலை செய்த மர்மநபர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது தெரியவில்லை.

இதில் தொடர்புடைய மர்மநபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து துணை போலீஸ் கமி‌ஷனர் ஜெனேந்திர கனகாவி உத்தரவிட்டார். தனிப்படை போலீசார் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இதுகுறித்து வித்யாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தார்வார் நகரில் நடந்த இந்த கொலையால் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்