பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு திருவோட்டினை ஏந்தி ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் திருவோட்டினை ஏந்தியபடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2017-03-31 23:30 GMT

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில், டெல்லியில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவளித்து பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு திருவோட்டினை ஏந்தி பிச்சை எடுக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் விசுவநாதன் தலைமை தாங்கினார்.

திருவோட்டினை ஏந்தியபடி

ஆர்ப்பாட்டத்தில், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். மத்திய அரசு வழங்கிய வறட்சி நிவாரணம் தமிழக விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை. எனவே நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூர் மாவட்ட கொட்டரை நீர்த்தேக்க திட்டத்தை மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தின் போது திருவோட்டினை ஏந்தியபடியே தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கோ‌ஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கலிபுல்லா, மாணிக்கம், ரத்தினவேல், பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்