டெல்லி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் நிர்வாகிகள் வெளிநடப்பு
டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பெரம்பலூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் இருந்து விவசாய சங்க பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக பிரதான கூட்டரங்கில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் நந்தகுமார் தலைமை தாங்கினார். கூட்டம் தொடங்கியதும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும், டெல்லி தமிழக விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் அவர்கள் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். பயிர்காப்பீட்டு தொகையை அனைத்து விவசாயிகளுக்கும் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இயற்கை முறையில்...
அதனை தொடர்ந்து அனைத்து விவசாயிகளும் மீண்டும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது சாணக்கரைசல் உள்ளிட்ட இயற்கை உரங்களின் மூலம் நாட்டு பருத்தி, கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட பயிர்களை குறைந்த செலவில் விளைவிப்பது குறித்து இயற்கை விவசாயிகள் சிலர் கூட்டத்தின் போது எடுத்துரைத்தனர். அதனை தொடர்ந்து விவசாய சங்கபிரதிநிதிகள் விவசாயம் தொடர்பான கோரிக்கைகள் குறித்து பேசினர்.
கரும்பு நிலுவைத்தொகை
அப்போது விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ரமேஷ் பேசுகையில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வறட்சியின் காரணமாக விவசாயிகளுக்கு வேலை வழங்கப்படுகிறது. அந்த வேலையானது அரசு அறிவித்தபடி 150 நாட்கள் முழுமையாக வழங்கப்படவில்லை. எனவே இனிவரும் காலங்களில் முழுமையாக வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். செட்டிகுளம் காவட்டான் கட்டு பெரியஏரியின் வரத்து வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்பினை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன் பேசுகையில், பெரம்பலூர் மாவட்ட கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைதொகையினை விரைந்து வழங்க ஆலை நிர்வாகம் நடவடிக்கை எடுக் வேண்டும். மத்திய அரசு வழங்கிய வறட்சி நிவாரணத்தை அதிகப்படுத்தி வழங்க வேண்டும் என்று பேசினார்.
ஏரிகளை தூர்வார வேண்டும்
தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர்ராஜாசிதம்பரம் பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் வறட்சி நிவாரணம் பாரபட்சமின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதம வேளாண் காப்பீட்டு திட்டத்தின்கீழ் இன்சூரன்ஸ் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரிகளில் வண்டல்மண் எடுக்கும் அளவை அதிகப்படுத்தி கொடுக்க வேண்டும் என்று கூறினார்.
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் பூ.விசுவநாதன் பேசுகையில், வேப்பந்தட்டை தாலுகா தொண்டப்பாடி பால்உற்பத்தியாளர் சங்கத்தில் பணியாளர் ஒருவர் பால்கொள்முதல் செய்ததில் நிலுவைத்தொகையினை வழங்காமல் முறைகேட்டில் ஈடுபட்டிருக்கிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கீரைவாடிஏரி, அரும்பாவூர் பெரியஏரி, சித்தேரி உள்ளிட்ட ஏரிகளிலும் குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு தூர்வாரி ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
பால்பணம் முறைகேடு குறித்து...
அப்போது பால்பணம் முறைகேட்டில் ஈடுபட்ட அந்த பணியாளரை பணியிடைநீக்கம் செய்து துறைரீதியாக நடவடிக்கை எடுத்துள்ளதாக தொண்டப்பாடி பால்உற்த்தியாளர் சங்க அதிகாரி கலெக்டரிடம் தெரிவித்தார். மேலும் கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் செல்லதுரை, பூலாம்பாடி வரதராஜன் உள்பட விவசாய சங்க நிர்வாகிகள் பலர் தங்கள் பகுதியிலுள்ள விவசாய கோரிக்கைகள் குறித்து பேசினார்கள். முடிவில் இந்த கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் நந்தகுமார் பதில் கூறினார். இந்த கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முத்துகுமாரசாமி, மாவட்ட கலெக்டரின் நேர்முகஉதவியாளர் (வேளாண்மை) ராஜகோபால், மாவட்ட வருவாய் அலுவலர் (எறையூர் சர்க்கரை ஆலை) மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.