அரியலூரில் மறியல் போராட்டம் நடத்த முயன்ற வணிகர்களால் பரபரப்பு

அரியலூரில் மறியல் போராட்டம் நடத்த முயன்ற வணிகர்களை பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரிகள் சமரசம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-03-31 22:45 GMT

அரியலூர்,

அரியலூரில் நகருக்குள் பஸ் போக்குவரத்து இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வணிகர் சங்கம் உள்பட பொது நலசங்கங்களை சேர்ந்தவர்கள் ஏப்ரல் 31–ந்தேதி அரியலூர் தவுத்தாய்குளம் புறவழிச்சாலையில் மறியல் போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தனர். அந்த வகையில் நேற்று மறியல் போராட்டம் நடத்துவதற்காக அரியலூர் தேரடி பகுதியில் வணிகர்கள் திரளானோர் நின்று கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த அரியலூர் தாசில்தார் முத்துகிருஷ்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிசக்கரவர்த்தி, மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபாகரன், அரசு போக்குவரத்து கழக அரியலூர் கிளை மேலாளர் செந்தில்குமார் ஆகியோர் வணிகர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

மறியல் முயற்சியை கைவிட்டனர்

பேச்சுவார்த்தையின் போது, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் மார்க்கமாக செல்லும் பஸ்கள் அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மாதாகோவில், அரண்மனை தெரு வழியாக வந்து அரியலூர் பஸ் நிலையத்தில் வந்து செல்ல வழிவகை செய்யப்படும் என்பன உள்ளிட்டவற்றை அதிகாரிகள் எடுத்து கூறினர். இதனை ஏற்று கொண்ட வணிகர்கள் சமாதானமடைந்து மறியல் முயற்சியை கைவிட்டனர். அனைத்து சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் மனோகரன், வியாபாரிகள் சங்க தலைவர் ராமலிங்கம், நகைக்கடை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஸ்ரீதர், அமுதன், மாருதிராஜா, ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த சம்பவம் அரியலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்