ஜெயலலிதா மரணத்துக்கு விசாரணை கேட்ட போலீஸ்காரருக்கு கட்டாய பணி ஓய்வு

ஜெயலலிதா மரணத்துக்கு விசாரணை கேட்ட தேனி போலீஸ்காரருக்கு கட்டாய பணி ஓய்வு

Update: 2017-03-31 22:45 GMT

தேனி,

தேனி மாவட்டம் ஓடைப்பட்டியில் போலீஸ்காரராக இருந்து வந்தவர் வேல்முருகன். மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றபோது சென்னை டி.ஜி.பி. அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற அவர் ஜெயலலிதா மரணமடைந்தபோது விருப்ப ஓய்வு கேட்டு மனு கொடுத்தார்.

தொடர்ந்து சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேட்டியளித்ததால் ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்ட அவர் ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை வேண்டும் எனக்கோரி தேனி லோயர்கேம்ப்பில் உண்ணாவிரதம் இருந்தபோது கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் போலீஸ் துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், விதிமுறைகளை மீறியும் நடந்து கொண்டதாலும் வேல்முருகனுக்கு கட்டாய பணி ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் நேற்று தெரிவித்தார்.

இதுபற்றி வேல்முருகன் கூறுகையில், ‘‘தனிப்பட்ட ஒரு குடும்பத்தை எதிர்த்ததால் எனக்கு கட்டாய பணி ஓய்வு வழங்கப்பட்டு உள்ளது. இதனை ஏற்கமுடியாது. வருகிற 3–ந்தேதி ஜெயலலிதா சமாதியில் வைத்து அடுத்தக்கட்ட போராட்டம் பற்றி அறிவிப்பேன்’’ என்றார்.

மேலும் செய்திகள்