லாரிகள் வேலைநிறுத்தம் 2–வது நாளாக நீடிப்பு: நாமக்கல்லில் 6 கோடி முட்டைகள் தேக்கம் கோழித்தீவன பற்றாக்குறை ஏற்படும் அபாயம்

லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் நேற்று 2–வது நாளாக நீடித்தது.

Update: 2017-03-31 23:00 GMT

நாமக்கல்,

வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கட்டண உயர்வு, பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரி உயர்வு ஆகியவற்றை திரும்பப்பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் நேற்று முன்தினம் முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இவர்களின் போராட்டம் நேற்று 2–வது நாளாக நீடித்தது.

இந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக தமிழகத்தில் மட்டும் சுமார் 4 லட்சம் லாரிகள் நேற்று 2–வது நாளாக ஓடவில்லை. நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படவில்லை என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

வேலைநிறுத்த போராட்டம் நீடித்து வருவதால் நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க அலுவலக வளாகம், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மற்றும் லாரி பட்டறைகளில் லாரிகளை நிறுத்தி வைத்து இருந்ததை காண முடிந்தது.

6 கோடி முட்டைகள் தேக்கம்

இதற்கிடையே, லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக கடந்த 2 நாட்களில் நாமக்கல் மண்டலத்தில் கோடிக்கணக்கான முட்டைகள் தேக்கம் அடைந்து இருப்பதாக பண்ணையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து கோழிப்பண்ணையாளர்கள் சிலர் கூறியதாவது:–

லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்திற்கு முதல் 2 நாட்கள் நாங்கள் ஆதரவு அளித்து உள்ளோம். இதனால் நாமக்கல் மண்டலத்தில் சுமார் 6 கோடி முட்டைகள் தேங்கி விட்டன.

குளிர்பதன கிடங்கு

நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 3 கோடி முட்டைகளை சேமிக்கும் அளவுக்கு குளிர்பதன கிடங்குகள் உள்ளன. எனவே, தேங்கும் முட்டைகளை குளிர்பதன கிடங்குகளில் வைக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. தற்போது வெயில் சுட்டெரித்து வருவதால் முட்டைகளை ஒரு வாரத்திற்கு மேல் வைக்க முடியாது. இதே நிலை நீடித்தால் கோழிப்பண்ணையாளர்கள் கடுமையான நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.

எனவே, தமிழக அரசு லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். வேலைநிறுத்த போராட்டம் நீடிக்கும் பட்சத்தில் முட்டை மற்றும் கோழித்தீவனங்கள் ஏற்றிச்செல்லும் லாரிகளை பாதுகாப்புடன் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீவன பற்றாக்குறை

கோழிகளுக்கு தேவையான தீவன மூலப்பொருட்களை வடமாநிலங்களில் இருந்து பெரும்பாலான பண்ணையாளர்கள் லாரிகள் மூலமே வாங்கி வருகின்றனர். தற்போது வேலைநிறுத்த போராட்டம் காரணமாக கடந்த சில நாட்களாக வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு லாரிகள் இயக்கப்படவில்லை. எனவே, கோழித்தீவன தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது.

கோழித்தீவன மூலப்பொருட்களின் ஒரு சில தானியங்களை மட்டுமே வடமாநிலங்களில் இருந்து சரக்கு ரெயில் மூலம் வாங்கி வர முடியும். அதுவும் 2,400 டன் ‘புக்கிங்’ ஆன பிறகு தான் அங்கிருந்து கொண்டு வர முடியும். எனவே, லாரிகள் வேலைநிறுத்தம் நீடிக்கும் பட்சத்தில் கோழித்தீவன பற்றாக்குறை ஏற்படும். இதனால் மத்திய, மாநில அரசுகள் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பொருட்கள் தேக்கம்

இதேபோல் லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு எடுத்து செல்லப்படும் ஜவுளி, ஜவ்வரிசி, வெற்றிலை உள்ளிட்ட பல கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கம் அடைந்து இருப்பதாக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்