சென்னிமலையில் விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கூலி குறைக்கப்பட்டதை கண்டித்து ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் சென்னிமலையில் விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2017-03-31 22:45 GMT

சென்னிமலை,

சென்னிமலை வட்டாரத்தில் உள்ள விசைத்தறி தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் கூலி உயர்வு ஆகியவை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 25–10–2015 அன்று 3 ஆண்டு கால கூலி மற்றும் போனஸ் குறித்து ஒப்பந்தம் போடப்பட்டது.

இந்த நிலையில், விசைத்தறி உரிமையாளர்கள் நூல் விலை உயர்வை காரணம் காட்டி தொழிலாளர்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட கூலியில் இருந்து ரூ.1 முதல் ரூ.3 வரை தன்னிச்சையாக குறைத்து வழங்கி வருவதாகவும், இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.60 வரை கூலி இழப்பு ஏற்பட்டு வந்ததாகவும் தொழிலாளர்கள் கூறி வந்தனர்.

எனவே கூலி குறைக்கப்பட்டதை கண்டித்து ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் சென்னிமலை பஸ் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் எம்.செங்கோட்டையன் தலைமை தாங்கினார். கட்டிட தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த நாகப்பன் முன்னிலை வகித்தார். இதில், ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட பொது செயலாளர் எஸ்.சின்னுசாமி உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில், ஐ.என்.டி.யு.சி மாவட்ட தலைவர் தங்கராஜ், புரட்சிகர விவசாயிகள் முன்னணியை சேர்ந்த பாரதி, மணிமாறன், ஏ.ஐ.டி.யு.சி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்