உளுந்தூர்பேட்டை அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதல்; 2 டிரைவர்கள் பலி

உளுந்தூர்பேட்டை அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 டிரைவர்கள் பலியானார்கள்.

Update: 2017-03-31 23:00 GMT
உளுந்தூர்பேட்டை,

சென்னையில் இருந்து கோவைக்கு நேற்று முன்தினம் இரவு தனியார் பார்சல் சர்வீஸ் லாரி வீட்டு உபயோக பொருட்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. லாரியை மதுராந்தகம் அருகே மேலவலம்பேட்டையை சேர்ந்த பாபுகான் மகன் ரியாஸ் (வயது 26) என்பவர் ஓட்டினார். இவருடன் அதே பகுதியை சேர்ந்த அமீதுபாட்ஷா (36), ஷியாம்சுந்தர் (26) ஆகியோர் வந்தனர்.

இந்த லாரி நேற்று அதிகாலை 2 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே கோவையில் இருந்து ஐதராபாத் நோக்கி தேங்காய் நார்களை ஏற்றிக்கொண்டு கனரக லாரி வந்தது. எலவனாசூர்கோட்டை புறவழிச்சாலையில் 2 லாரிகளும் திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.

2 டிரைவர்கள் பலி

இந்த விபத்தில் பார்சல் சர்வீஸ் லாரி அப்பளம்போல் நொறுங்கி உருக்குலைந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கிய லாரி டிரைவர் ரியாஸ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். அமீதுபாட்ஷா, ஷியாம்சுந்தர் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர்.

இதேபோல் தேங்காய் நார் ஏற்றி வந்த கனரக லாரியின் முன்பகுதியும் சேதமடைந்தது. இந்த லாரியை ஓட்டி வந்த டிரைவரான நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த தெங்கன்பள்ளி கிராமத்தை சேர்ந்த வீரக்குமார் (22) என்பவரும் அதே இடத்திலேயே பலியானார். இவருடன் வந்த தந்தை கருப்பண்ணன் (50) படுகாயம் அடைந்தார்.

இந்த விபத்து குறித்த தகவல் அறிந்ததும் எலவனாசூர்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயம் அடைந்த அமீதுபாட்ஷா, ஷியாம்சுந்தர், கருப்பண்ணன் ஆகிய 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்களில் மேல்சிகிச்சைக்காக அமீதுபாட்ஷா, ஷியாம்சுந்தர் ஆகிய இருவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர், விபத்தில் பலியான இருவரின் உடலையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

விபத்து குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக எலவனாசூர்கோட்டை புறவழிச்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்