நெல்லையில் தென்மண்டல போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் ஐ.ஜி. முருகன் தலைமையில் நடந்தது

நெல்லையில் தென்மண்டல போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம், ஐ.ஜி. முருகன் தலைமையில் நடைபெற்றது.

Update: 2017-03-31 21:30 GMT

நெல்லை,

நெல்லையில் தென்மண்டல போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம், ஐ.ஜி. முருகன் தலைமையில் நடைபெற்றது.

போலீஸ் அதிகாரிகள் கூட்டம்

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று தென் மண்டல போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மதுரை தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. முருகன் தலைமை தாங்கினார். மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஆனந்தகுமார் சோமானி, திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. கார்த்திகேயன், ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன், தூத்துக்குடி மாவட்ட சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஷ் உள்ளிட்ட 9 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் கூடுதல் சூப்பிரண்டுகள், துணை சூப்பிரண்டுகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. முருகன் ஒவ்வொரு மாவட்டம் வாரியாக சட்டம்–ஒழுங்கு பிரச்சினைகள், குற்ற வழக்குகள் தொடர்பாக விளக்கம் கேட்டார். பின்னர் அவர் பேசியதாவது:–

விரைந்து நடவடிக்கை

தென் மண்டலத்தில் குற்றங்களை கட்டுப்படுத்த போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த சம்பவம் நடைபெற்றாலும், தகவல் கிடைத்த உடன் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரச்சினைகளை கையாள வேண்டும். குற்றவாளிகளை உடனுக்குடன் கைது செய்ய வேண்டும்.

குற்றங்களை தடுக்க ரகசிய தகவல்களை முன்கூட்டியே பெற்று போலீசார் உஷார் நிலையில் கண்காணிப்பு பணி மேற்கொள்ள வேண்டும். சட்டம்–ஒழுங்கை சீராக பராமரிக்க வேண்டும்.

இவ்வாறு ஐ.ஜி. முருகன் பேசினார்.

குற்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவித்தொகையை அவர் வழங்கினார்.

மேலும் செய்திகள்