விழுப்புரம், செஞ்சியில் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து விழுப்புரம்

Update: 2017-03-31 22:30 GMT

விழுப்புரம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தேசிய மற்றும் மாநில நதிகளை இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் நேற்று காலை விழுப்புரம் நகராட்சி திடலில் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்துக்கு கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் முருகையன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ரவி, பொருளாளர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பட்டை நாமத்துடன்...

ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சிலர் சட்டை அணியாமலும், நெற்றியில் பட்டை நாமம் போட்டுக்கொண்டும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோ‌ஷங்களை எழுப்பினார்கள். மேலும் தேசிய, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். வறட்சி நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களை விவசாய வேலைக்கு பயன்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர்.

இதில் விவசாய சங்க நிர்வாகிகள் ஜெயகோடி, புருஷோத்தமன், ரமேஷ், கலியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கண்டமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து விவசாயிகள் இரு சக்கர வாகனத்தில் ஊர்வலமாக வந்தனர்.

செஞ்சி

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் செஞ்சி தாலுகா அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் உதயகுமார் தலைமை தாங்கினார். சர்க்கரை ஆலை தலைவர் குண்டுரெட்டியார், செயலாளர் தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ராமமூர்த்தி, மாவட்ட தலைவர் சுப்பிரமணி, மாவட்ட நிர்வாகிகள் கோவிந்தசாமி, மாதவன், சிவராமன், முருகன், எழில்ராஜா, துரைராஜ், வரதராஜ் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். முடிவில் அந்தாரி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்