காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சையில் 4–வது நாளாக விவசாயிகள் முற்றுகை போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சையில் 4–வது நாளாக விவசாயிகள் முற்றுகை
தஞ்சாவூர்,
காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கடந்த 28–ந்தேதி முதல் தொடர் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இரவு, பகலாக நடைபெறும் இந்த போராட்டம் நேற்று 4–வது நாளாகவும் நீடித்தது. காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும். காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை ரத்து செய்யக்கூடாது. மேகதாதுவில் அணை கட்டுவதை தடை செய்ய வேண்டும். காவிரி டெல்டா பகுதியில் எண்ணெய், எரிவாயு எடுக்கக்கூடாது.
காவிரி சமவெளி பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும். அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு உரிய வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
விவசாயிகள் பங்கேற்புபோராட்டத்தில் காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன், தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அயனாவரம் முருகேசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மணிமொழியன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் வக்கீல் நல்லதுரை, தமிழர் தேசிய பேரியக்க மாவட்ட செயலாளர் குழ.பால்ராசு, இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் சிமியேன்சேவியர்ராஜ், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைமை ஆலோசகர் பாரதிசெல்வன், கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் சின்னப்பன் மற்றும் பல்வேறு விவசாய அமைப்புகளை சேர்ந்தவர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
போராட்டம் தொடரும்போராட்டத்தில் ஈடுபட்ட காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் நிருபர்களிடம் கூறியதாவது:–
விவசாயிகளை மத்திய அரசும், மாநில அரசும் கண்டுகொள்வதில்லை. டெல்டா பகுதியை பாலவனமாக்கும் முயற்சி நடக்கிறது. மீத்தேன், ஷேல் எரிவாயு, ஹைட்ரோ கார்பன் திட்டம் போன்றவை மூலம் டெல்டா பகுதியை அழிக்க நினைக்கிறார்கள். மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டினால் இங்கு தண்ணீர் வராது. குடிக்க கூட தண்ணீர் இருக்காது. எனவே விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விவசாயிகளின் தொடர் போராட்டத்தையடுத்து தஞ்சை கலெக்டர் அலுவலகம் பகுதியில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.