தஞ்சையில் காய்கறிகள் விலை கடும் உயர்வு கத்தரிக்காய் கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை

தஞ்சையில் காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளன.

Update: 2017-03-31 22:30 GMT

தஞ்சாவூர்,

தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்குப்பருவமழை பொய்த்ததால் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் காய்கறிகள் உற்பத்தி வெகுவாக குறைந்து விட்டது. இதனால் விலையும் அதிகரிக்க தொடங்கி விட்டது. இந்த நிலையில் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் வெளி மாவட்டங்களில் இருந்து தஞ்சைக்கு வரும் காய்கறிகளின் வரத்தும் குறைந்து வருகிறது.

தஞ்சையில் உள்ள காமராஜர் மார்க்கெட்டிற்கு ஒட்டன்சத்திரம், ஊட்டி போன்ற பகுதிகளில் இருந்து லாரிகளில் காய்கறிகள் வரும். ஆனால் நேற்று தஞ்சை மார்க்கெட்டிற்கு வழக்கத்தை விட குறைவான லாரிகளிலேயே காய்கறிகள் வந்தன.

விலை கடும் உயர்வு

வெளிமாவட்டங்களில் இருந்து காய்கறிகள் வரத்து குறைந்துள்ளதாலும், உற்பத்தி குறைவாலும் தற்போது காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. நேற்று கத்தரிக்காய் 1 கிலோ 70 முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இதே போல் சின்ன வெங்காயமும் கிலோ ரூ.70 வரை விற்பனை செய்யப்பட்டது.

கடந்த சில நாட்களாக 30 ரூபாய்க்கு விற்பனையான கேரட் நேற்று கிலோ ரூ.50–க்கும், ரூ.25–க்கு விற்பனை செய்யப்பட்ட வெண்டைக்காய் கிலோ ரூ.50–க்கும், ரூ.20–க்கு விற்பனை செய்யப்பட்ட சவ்சவ் கிலோ ரூ.50–க்கும் விற்பனை செய்யப்பட்டது. இது தவிர முருங்கைக்காய் கிலோ ரூ.20–க்கும், உருளைக்கிழங்கு கிலோ ரூ.15–க்கும், பச்சை மிளகாய் கிலோ ரூ.30–க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.10–க்கும் விற்பனை செய்யப்பட்டது.

லாரிகள் வேலைநிறுத்தம்

இது குறித்து காய்கறி வியாபாரி ஒருவர் கூறுகையில், ‘‘லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக தற்போது குறைந்த அளவே காய்கறிகள் தஞ்சை காமராஜர் மார்க்கெட்டுக்கு வருகின்றன. அதுவும் அழுகும் காய்கறிகள் வரத்து குறைந்ததால் விலையும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. லாரிகள் வேலை நிறுத்தம் மேலும் நீடித்தால் இன்று முதல் காய்கறிகள் வரத்து அடியோடு குறைந்து விடும். வருகிற திங்கட்கிழமை முதல் காய்கறிகளின் விலையும் கடுமையாக உயர்ந்து காணப்படும்’’என்றார்.

மேலும் செய்திகள்