‘தாமிரபரணியில் விரைவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்’ மதுரை ஐகோர்ட்டில் அரசு தரப்பு உறுதி

தாமிரபரணியில் ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும் என்று மதுரை ஐகோர்ட்டில் அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டு உள்ளது.

Update: 2017-03-31 23:00 GMT

மதுரை,

அகில பாரத இந்து பக்தசபையின் மாநில இளைஞரணி தலைவர் எஸ்.கணேசன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

பொதிகை மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆறு, நெல்லை மாவட்டம் வழியாக புன்னக்காயல் பகுதியில் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. இது வற்றாத ஜீவநதி. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் நீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. இந்த ஆற்றின் தண்ணீரைக்கொண்டு 2 லட்சம் எக்டேர் பரப்பளவில் இருபோக சாகுபடி நடக்கிறது. அதேவேளையில் தாமிரபரணியில் சட்டவிரோதமாக மணல் குவாரிகளும் செயல்பட்டு வருகின்றன. ஆற்றுப்படுகைகள் தனிநபர்களால் ஆக்கிரமிரக்கப்பட்டு உள்ளன. இதனால் நீரின் போக்கு மாறி உள்ளது.

கழிவுநீர் கலக்கிறது

அதுமட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது. தற்போது தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலந்து வருகிறது. வீடுகள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை நேரடியாக ஆற்றில் கலக்கச் செய்கிறார்கள். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

எனவே தாமிரபரணி ஆற்றுப்படுகையில் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு புகார் மனு அனுப்பினேன். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தாமிரபரணியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

ஆக்கிரமிப்பு அகற்றப்படும்

இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘‘வருகிற 4–ந்தேதிக்குள் தாமிரபரணியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்’’ என்று தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கு விசாரணையை வருகிற 7–ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்