மதுரை நேதாஜி தண்டாயுதபாணி சாமி கோவில் பங்குனி உத்திரப் பெருவிழா வருகிற 4–ந் தேதி தொடக்கம் 7–ந் தேதி பால்குடம் அபிஷேகம் நடக்கிறது
மதுரை நேதாஜி தண்டாயுதபாணிசாமி கோவில் பங்குனி உத்திரப் பெருவிழா வருகிற 4–ந் தேதி தொடங்குகிறது.;
மதுரை,
மதுரை நேதாஜி ரோடு தண்டாயுதபாணிசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. 7–ம் நூற்றாண்டில் வாழ்ந்து திருத்தொண்டர் தொகை பாடி சைவம் தழைக்க வழி செய்த தம்பிரான் தோழராகி சுந்தரமூர்த்தி சுவாமிகள் இந்த ஆலயத்தை வழிபட்டதன் காரணமாக, இத்திருத்தலம் பழங்காலத்தில் சுந்தரர் மடம் என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. முருகப்பெருமானுடைய தெய்வத்திருவுருவம் முன்னாளில் ஆண்டு தோறும் தைப்பூசத்தன்று பழனி மலைக்கு எழுந்தருளி, அங்கு வழிபாடுகள் செய்யப்பட்டு வழக்கமாக இருந்துள்ளதால் இந்த கோவிலை பழனியாண்டவர் கோவில் என்று அழைக்கப்பட்டு வந்தது.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த தண்டாயுதபாணிசாமி திருக்கோவிலில் பங்குனி உத்திரப் பெருவிழா வருகிற 4–ந் தேதி தொடங்கி 10–ந் தேதி வரை நடக்கிறது. விழாவின் முதல் நாள் 4–ந் தேதி காலை 5 மணிக்கு ஸ்கந்த ஹோமம், ருத்ர ஜெபம், மகாஅபிஷேகம், தங்க கவச சாத்துப்படி செய்யப்படுகிறது. மாலை 4 மணிக்கு பூக்கூடாரம், சந்தனக்காப்பு அலங்காரம் நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜைகளை அமைச்சர் உதயக்குமார் தொடங்கி வைக்கிறார்.
பால்குடம் அபிஷேகம்பங்குனி உத்திரத்தை முன்னிட்டு 7–ந் தேதி காலை 7 மணிக்கு மூலவர் தண்டாயுதபாணிசாமிக்கு நேர்த்திக்கடன் பால்குடம் அபிஷேகமும், காவடி செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறும். அன்றைய தினம் காலை 6½ மணிக்கு வைகை ஆற்றில் இருந்து பால் குடம் ஊர்வலம் புறப்பட்டு, கீழமாசிவீதி, அம்மன் சன்னதி, தெற்குசித்திரை வீதி வழியாக கோவிலை வந்தடையும்.
விழாவின் முக்கிய தினமான பங்குனி உத்திரத்தன்று காலை 5 மணிக்கு ஸ்கந்த ஹோமத்தை தொடர்ந்து, மூலவருக்கு ருத்ரஜெபம் விஷேச அபிஷேக ஆராதனையும், தங்க கவச சாத்துபடியும்நடைபெறும். இன்று இரவு 7 மணிக்கு பூப்பலக்கில் தண்டாயுதபாணிசாமி உற்சவ மூர்த்தி 4 மாசி வீதிகளில் உலா வருகிறார். 10–ந் தேதி காலை 10 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சக்கரையம்மாள் செய்து வருகிறார்.