பெரியகுளம், அடிஅண்ணாமலையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

பெரியகுளம், அடிஅண்ணாமலையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2017-03-31 23:00 GMT

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருகே உள்ள பெரியகுளம் பகுதியை சேர்ந்த 100–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று திருவண்ணாமலை – காஞ்சி சாலையில் திடீரென பெரியகுளம் பஸ் நிறுத்தம் அருகே குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், ‘எங்கள் பகுதிக்கு சுமார் 6 மாதமாக குடிநீர் வினியோகிக்கவில்லை. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கும் தண்ணீர் ஏற்றப்படுவதில்லை. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தண்ணீர் தேவைக்காக சுமார் 1½ கிலோ மீட்டம் தூரம் சென்று தண்ணீர் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது’ என்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை தாலுகா போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், வருவாய்த்துறையினர் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியலால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மற்றொரு சம்பவம்

இதேபோல திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள அடிஅண்ணாமலை பகுதி மக்களும் நேற்று காலை கிரிவலப்பாதையில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல் செய்தனர். தகவல் அறிந்ததும் தாலுகா போலீசார் அங்கு சென்று, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்