ராசிபுரம் அருகே பரபரப்பு; டாஸ்மாக் மதுக்கடை கட்டுமான பணியை தடுத்து நிறுத்த திரண்டு வந்த பொதுமக்கள் பெண்கள் சமையல் செய்து போராட்டம்

ராசிபுரம் அருகே டாஸ்மாக் மதுக்கடை கட்டுமான பணியை தடுத்து நிறுத்த திரண்டு வந்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-03-31 23:00 GMT

ராசிபுரம்,

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி 22–வது வார்டு சேந்தமங்கலம் பிரிவு சாலை அருகே டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து, அந்த கடையை கோனேரிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தொட்டியப்பட்டிக்கு செல்லும் சாலையில் இருக்கும் நகராட்சி இடத்திற்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதனிடையே சேந்தமங்கலம் பிரிவில் இருந்து தொட்டியப்பட்டி சாலையில் மதுக்கடையை இடமாற்றம் செய்ய தொட்டியப்பட்டி, ஜெ.ஜெ.நகர், காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திரண்டு வந்தனர்

இந்த நிலையில் விடுதலைக்களம் இயக்கத்தின் மாநில தலைவர் நாகராஜன் தலைமையில் தொட்டியப்பட்டி, ஜெ.ஜெ.நகர், காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை தொட்டியப்பட்டி சாலையில் மதுக்கடையை அமைக்க கூடாது என்றும், அங்கு நடந்து வரும் மதுக்கடை கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்தவும் திரண்டு வந்தார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்கள் மதுக்கடை கட்டுமான பணி நடக்கும் இடத்துக்கு அருகே செல்லவிடாமல் சாலையிலேயே தடுத்து நிறுத்தினர். அப்போது பொதுமக்கள், எங்களின் அடிப்படை தேவைகளை அரசு பூர்த்தி செய்யாமல் இதுபோன்ற மக்கள் விரோத போக்கில் ஈடுபடுவதாக கூறி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்களிடம், மதுக்கடை தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதனால் அவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.

சமையல் செய்த பெண்கள்

ஆனால், மதுக்கடை கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்துக்கு அருகே தொட்டியபட்டி, காந்தி நகர், ஜெ.ஜெ.நகர் பகுதியைச் சேர்ந்த பெண்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் சமையல் செய்து அங்கேயே சாப்பிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் மீண்டும் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம் என அவர்கள் தெரிவித்தனர்.

இதனால் அங்கு அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க ராசிபுரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொட்டியப்பட்டி சாலையில் மதுக்கடையை அமைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகே நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்