சேலம் மத்திய சிறை, குண்டர் தடுப்பு கைதிகள் அறையில் கழிவறை, குப்பை தொட்டியில் பதுக்கி வைத்திருந்த 2 செல்போன்கள் சிக்கியது அதிகாரிகள் விசாரணை

சேலம் மத்திய சிறையில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் குண்டர் தடுப்பு கைதிகள்

Update: 2017-03-31 23:00 GMT

சேலம்,

சேலம் மத்திய சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என 800–க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். சேலம் மத்தியசிறை கண்காணிப்பாளராக இருந்த செந்தில்குமார் சமீபத்தில் மாற்றப்பட்டு, ஆண்டாள் என்பவர் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் சிறைக்கு அழைத்து வந்த கைதி ஒருவரிடம் சிறைக்காவலர்கள் சோதனை நடத்தியபோது கஞ்சா வைத்திருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அந்த புகாரின்பேரில் சேலம் மத்தியசிறை துணை ஜெயிலர் ராமசாமி, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கிளை சிறைக்கு மாற்றப்பட்டார்.

அதிரடி சோதனை

இந்த நிலையில் சேலம் மத்திய சிறையில் கைதிகளிடம் கஞ்சா மற்றும் செல்போன்கள் மீண்டும் அதிகளவில் புழக்கத்தில் இருப்பதாக சிறை கண்காணிப்பாளர் ஆண்டாளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிறைத்துறை அதிகாரிகள் உத்தரவின்பேரில், கைதிகள் அடைக்கப்பட்டிருந்த அறைகளில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சிறையின் 8–ம் தொகுதியில் உள்ள 1–ம் எண் பிளாக்கில் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் மணி, பூபதி, அர்ச்சுணன், மணிகண்டன், முஸ்தபா ஆகியோர் அறையில் சிறைத்துறை போலீஸ் ஏட்டுகள் சோதனை மேற்கொண்டனர்.

2 செல்போன்கள் பறிமுதல்

அப்போது குண்டர் தடுப்பு கைதிகள் அறையில் உள்ள கழிவறையில் பாலித்தீன் கவரில் கருப்புநிற செல்போன் ஒன்றும், பேட்டரி–1, சிம்கார்டு–1, லைட்டர்–1 ஆகியன பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை சிறை ஏட்டுகள் கண்டுபிடித்து கைப்பற்றினர். இதேபோல 4–ம் அறை வராண்டாவில் உள்ள குப்பை தொட்டியில் செல்போன் ஒன்றை துணை ஜெயிலர் சுகுமாரன் கண்டுபிடித்து கைப்பற்றினார்.

இதுகுறித்து சேலம் அஸ்தம்பட்டி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதில் சம்பந்தப்பட்ட 5 குண்டர் தடுப்பு கைதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதிகாரிகள் விசாரணை

இந்த நிலையில் அந்த புகாரை போலீசார் ஏற்காமல், சிறைத்துறைக்கே திருப்பி அனுப்பி விட்டனர். மேலும் அத்துடன், சிறையில் நடந்த இந்த சம்பவத்திற்கு சிறை உயர் அதிகாரியான கண்காணிப்பாளரே நடவடிக்கை எடுக்கமுடியும் என்றும், சிறையில் செல்போன் புழக்கத்திற்கு காரணமானவர்களை கண்டறிந்து சிறைத்துறை சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்து திரும்ப அனுப்பி விட்டனர்.

சிறையில் செல்போன்கள் சிக்கிய சம்பவத்தில், கைதிகளுக்கு செல்போன்கள் கொடுத்தது யார்? என சிறைத்துறை அதிகாரிகள் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்