பாம்பன் குந்துகால் கடற்கரையில் ரூ.60 கோடியில் துறைமுகம் கட்டும் பணி விரைவில் தொடங்கும் மீன்வளத்துறை ஆணையாளர் தகவல்
ஆழ்கடல் மீன்பிடி திட்டத்திற்காக பாம்பன் குந்துகால் கடற்கரையில் ரூ.60 கோடியில் துறைமுகம் கட்டும் பணி விரைவில் தொடங்கும்
ராமேசுவரம்,
ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாக்ஜலசந்தி கடல் பகுதியில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும், படகுகளுடன் மீனவர்கள் சிறை பிடிக்கப்படும் சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன. இலங்கை கடற்படையின் கெடுபிடியால் ராமேசுவரம் உள்ளிட்ட தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கவே செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.
தமிழகத்தில் ஆழ்கடல் மீன் பிடிப்பு திட்டம் கொண்டு வரும் பட்சத்தில் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி செல்வது குறைவதுடன் இலங்கை கடற்படை பிரச்சினை இல்லாமலும் மீன் பிடித்து வர முடியும் என்றும் கூறப்படுகிறது. அதற்காக தமிழகத்தில் ஆழ் கடல் மீன் பிடிப்பை ஊக்கப்படுத்த மத்திய–மாநில அரசுகள் துரித நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதற்காக மத்திய அரசு ரூ. 750 கோடியும்,மாநில அரசு ரூ. 750 கோடியும் ஆழ்கடல் மீன் பிடிப்பு திட்டத்திற்காக ஒதுக்கி உள்ளது.இதில் முதல் கட்டமாக மத்திய அரசு ரூ. 100 கோடி நிதியை தமிழக அரசுக்கு ஒதுக்கி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆழ்கடல் மீன்பிடி துறைமுகம் சாயல்குடி அருகே உள்ள மூக்கையூர் கடற்கரை மற்றும் ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் குந்துகால் கடற்கரையில் அமைக்கப்பட உள்ளது.
இந்தநிலையில் ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் குந்துகால் கடற்கரையில் ஆழ்கடல் மீன்பிடிதுறைமுகம் கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள கடற்கரை பகுதியை நேற்று தமிழக மீன்வளத்துறை ஆணையாளர் பியூலாராஜேஷ்,மாவட்ட கலெக்டர் நடராஜன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது துறைமுகம் கட்டுவதற்கான வரைபடத்தை மீன்வளத்துறை ஆணையாளர் பார்வையிட்டார். தொடர்ந்து பாம்பன் தெற்குவாடி கடற்கரையில் மீன்வளத்துறை மூலம் கட்டி முடிக்கப்பட்டுள்ள மீன்பிடி இறங்குதளத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விரைவில் தொடங்கும்பின்னர் தமிழக மீன்வளத்துறை ஆணையாளர் பியூலா ராஜேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:– ஆழ்கடல் மீன் பிடி துறைமுகம் ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 இடங்களில் அமைக்கப்பட உள்ளது. மூக்கையூரில் துறைமுகம் கட்டும் பணி தொடங்கி நடந்து வருகிறது. 8 மாதத்திற்குள் இங்கு துறைமுகம் கட்டும் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. குந்துகால் கடற்கரையில் ரூ.60 கோடியில் ஆழ்கடல் மீன்பிடி துறைமுகம் கட்டுவதற்கான பணி விரைவில் தொடங்கும். 600 மீட்டர் நீளத்தில் துறைமுகம் அமைக்கப்பட உள்ளது. மூக்கையூர் மற்றும் குந்துகால் கடற்கரையில் அமைய உள்ள துறைமுகத்தில் 600 மீன்பிடி படகுகள் ஒரே நேரத்தில் நிறுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது உடன் மீன்துறை துணை இயக்குனர் ஐசக்ஜெயக்குமார், ராமேசுவரம் மீன்துறை உதவி இயக்குனர் கொளஞ்சிநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.