நெல்லை மாவட்டத்தில் அரசு நிலங்களில் இருந்த 60 சதவீதம் சீமை கருவேல மரங்கள் அகற்றம் கலெக்டர் கருணாகரன் தகவல்

நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு நிலங்களில் இருந்த 60 சதவீதம் சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு விட்டதாக, கலெக்டர் கருணாகரன் தெரிவித்தார்.

Update: 2017-03-30 21:30 GMT

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு நிலங்களில் இருந்த 60 சதவீதம் சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு விட்டதாக, கலெக்டர் கருணாகரன் தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டம்

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில், மாவட்டத்திலுள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுவது குறித்து மண்டல அளவிலான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் கருணாகரன் தலைமை தாங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

சீமை கருவேல மரங்கள் வேளாண் நிலங்களையும், பிற வாழ்வாதாரங்களையும் நாசப்படுத்த கூடிய ஒரு கொடிய தாவரமாகும். இதனால் ஏற்படும் தீமைகள் அதிகமாக இருப்பதால், இதனை முற்றிலுமாக அகற்றிட முனைப்புடன் செயல்பட வேண்டும்.

மதுரை ஐகோர்ட்டு கிளையின் உத்தரவுப்படி நெல்லை மாவட்டத்தில் சீமை கருவேல மரங்கள் வேருடன் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றது. கிராமப்புறம் மற்றும் நகர்புறங்களில் உள்ள பொதுமக்கள் அனைவருக்கும் சீமை கருவேல மரங்கள் வேருடன் அகற்றிடும் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.

60 சதவீதம்

அரசு நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்கள் வேருடன் 60 சதவிதம் வரை அகற்றப்பட்டு விட்டன. மேலும், அரசு மற்றும் தனியார் நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை வேருடன் அகற்றுவதற்கு மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, குடியிருப்போர் நலச்சங்கம், அரசியல் கட்சி பிரமுகர்கள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள், அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கருணாகரன் கூறினார்.

இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, மதுரை ஐகோர்ட்டு கிளை வக்கீல் ஆணையர்கள் சீனிவாச ராகவன், பினாய் காஷ், சேரன்மகாதேவி உதவி கலெக்டர் விஷ்ணு, உதவி கலெக்டர் (பயிற்சி) சாருஸ்ரீ, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சிப் பிரிவு) தண்டபாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்