தூத்துக்குடி மாவட்டத்தில் 5 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை

லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 5 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை. இதனால் துறைமுகப் பணி பாதிக்கப்பட்டுள்ளது.;

Update: 2017-03-30 21:30 GMT

தூத்துக்குடி,

லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 5 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை. இதனால் துறைமுகப் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

5 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை

15 ஆண்டுகளுக்கு மேலான கனரக வாகனங்களை இயக்க கூடாது என்ற அறிவிப்பை திரும்ப பெற வேண்டும், லாரிகளுக்கு இன்சூரன்சு தொகை அதிகரிப்பு, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கட்டண உயர்வு, பெட்ரோல் டீசல் மீதான வாட் வரி உயர்வு ஆகியவற்றை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படுகிறது.

இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நேற்று தூத்துக்குடி மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஒருநாள் வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை.

துறைமுகப்பணி பாதிப்பு

இதனால் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகப் பணி பெரிதும் பாதிக்கப்பட்டது. துறைமுகத்தில் இருந்து பல்வேறு நிறுவனங்களுக்கு சரக்கு ஏற்றிச் செல்லும் பணியும் முற்றிலும் முடங்கியது.

துறைமுகத்தில் இருந்து வெளியூர்களுக்கும் லாரிகள் இயக்கப்படவில்லை. தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 4 கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. அந்த கப்பல்களில் இருந்து சரக்குகள் கப்பல் தளத்தில் இறக்கி வைக்கப்பட்டு உள்ளன. இதனால் துறைமுகத்தில் சரக்குகள் தேங்கி கிடக்கின்றன.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்படும் சரக்குகளும் லாரிகள் ஓடாததால், ஆங்காங்கே குடோன்களில் வைக்கப்பட்டு உள்ளன.

லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக பரபரப்பாக காணப்படும் துறைமுக பைபாஸ் சாலை நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் செய்திகள்