மின்வயர் உரசியதால் பஞ்சு மூட்டை ஏற்றி வந்த லாரியில் தீப்பிடித்தது டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் சேதம் தவிர்ப்பு
திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் கிரிவலப்பாதையில் தனியாருக்கு சொந்தமான பஞ்சு குடோன் உள்ளது.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் கிரிவலப்பாதையில் தனியாருக்கு சொந்தமான பஞ்சு குடோன் உள்ளது. இங்கு நேற்று காலை ஒரு லாரியில் பஞ்சு மூட்டைகள் ஏற்றப்பட்டன. பின்னர், லாரி அங்கிருந்து விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள காஞ்சராங்குளத்திற்கு புறப்பட்டது. குடோனை விட்டு வெளியே வருவதற்குள், மின் வயர் உரசியதால் லாரியில் தீப்பிடித்தது. இதை அறிந்த லாரி டிரைவர், பஞ்சு குடோன் மற்றும் பஞ்சு குடோனை சுற்றி உள்ள கட்டிடங்கள் மற்றும் சிறு தொழில் கூடங்கள் மீது தீ பரவாமல் இருக்க சமர்த்தியமாக லாரியை பஞ்சு குடோனை விட்டு வெளியே ஓட்டி சென்றார். லாரியை அந்த பகுதியில் உள்ள மைதானத்தில் கொண்டு சென்று நிறுத்தினார். இருந்தபோதிலும் தீ மள மளவென எரிந்தது. இதுதொடர்பாக மதுரை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் லாரியின் ஒரு பகுதி எரிந்தது. மேலும், ரூ.5 லட்சம் மதிப்புள்ள பஞ்சு எரிந்து சேதமானது. இந்த விபத்து குறித்து திருப்பரங்குன்றம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.