கும்மிடிப்பூண்டியில் 7 பவுன் நகையை கொள்ளையடித்த வழக்கில் 3 பேர் கைது

கும்மிடிப்பூண்டியில் வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை மற்றும் டி.வி.யை கொள்ளையடித்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-03-25 21:45 GMT

கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டி கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் கணேஷ்குமார் (வயது 29). இவர் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி காயத்ரி (25). இருவரும் கோரிமேடு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்

இந்த நிலையில் கடந்த மாதம் 15–ந் தேதி கணவன்–மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு சென்றனர். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் பீரோவில் இருந்த 7 பவுன் நகை, ஒரு எல்.இ.டி டி.வி. ஆகியவற்றை திருடிச்சென்றனர். கொள்ளை போன நகை உள்ளிட்ட பொருளின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

இது குறித்து கணேஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

3 பேர் கைது

இந்த நிலையில் கணேஷ்குமார் வீட்டில் நகை, டி.வி.யை கொள்ளையடித்ததாக கும்மிடிப்பூண்டி சுண்ணாம்புக்குளத்தை சேர்ந்த சரவணன் (23), அய்யர்கண்டிகையை சேர்ந்த மணிகண்டன் (23) மற்றும் சந்துரு (26) ஆகிய 3 பேரை சிப்காட் போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 பவுன் நகை மற்றும் டி.வி.யை பறிமுதல் செய்தனர்.

மேலும், அவர்கள் இதுபோல் வேறு எங்கும் கொள்ளையடித்து உள்ளனரா? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்