ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி தாமதம்

கோத்தகிரியில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி தாமதம் கூடுதல் பணியாளர்கள் நியமிக்க கோரிக்கை

Update: 2017-03-25 22:15 GMT

கோத்தகிரி,

கோத்தகிரியில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி தாமதமாக நடப்பதால் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆதார் அட்டை

வங்கிகளில் புதிய கணக்கு தொடங்கவும், பழைய வங்கி கணக்கில் ஆதார் எண் கட்டாயம் இணைக்கவும் வேண்டி உள்ளது. மேலும், கியாஸ் சிலிண்டர் மானியம் பெறவும், பத்திர பதிவு செய்யவும் ஆதார் அட்டை கட்டாயம் என்ற நிலை உள்ளது. கடந்த ஆண்டுகளில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி அந்தந்த கிராமங்களில் நடைபெற்றது.

பின்னர் கோத்தகிரி தாலுகா அலுவலகத்தில் அதார் புகைப்படம் எடுக்கும் மையம் அமைக்கப்பட்டு நாள் ஒன்றுக்கு 80 பேர் முதல் 100 பேருக்கு ஆதார் புகைப்படம் எடுக்கும் பணி நடைபெற்று வந்தது. தற்போது அனைத்து பள்ளிகளிலும் 5 வயது முதல் பள்ளி குழந்தைகளுக்கு ஆதார் அட்டை நகல் கட்டாயமாக அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பள்ளி குழந்தைகள்

இதனால் கோத்தகிரி தாலுகா அலுவலகத்தில் உள்ள ஆதார் புகைப்படம் எடுக்கும் மையத்திற்கு வரும் பள்ளி குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குஞ்சப்பனை, கெங்கரை, கீழ்கோத்தகிரி போன்ற பகுதிகளில் உள்ள பள்ளிகளில் இருந்து அழைத்து வரப்படும் குழந்தைகள் காலை முதல் மாலை வரை காத்திருந்து புகைப்படம் எடுக்கிறார்கள்.

இதில் பாதிக்கும் மேலானவர்கள் புகைப்படம் எடுக்க முடியாமல் திரும்ப செல்லும் சிரமமான நிலை உள்ளது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

முன்பு 2 முதல் 3 பேர் புகைப்படம் எடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். தற்போது ஒருவர் மட்டுமே பணியில் அமர்த்தப்பட்டு உள்ளார். மேலும், இணையதளம் மிகவும் தாமதமாக இயங்குவதாலும், பெரும்பாலான தகவல்களை உள்ளீடு செய்வதாலும் ஒருவருக்கு ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க 15 முதல் 20 நிமிடங்கள் தேவைப்படுகிறது. நாள் ஒன்றுக்கு சுமார் 20 பேர் வரை தான் புகைப்படம் எடுக்க முடிகிறது. மேலும் காலையிலேயே டோக்கன் வழங்கப்பட்டு புகைப்படம் எடுக்கும் பணி நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகளை அழைத்து வரும் ஆசிரியர்கள் கூறும்போது, பள்ளி குழந்தைகளை காலை 9 மணிக்கு அழைத்து கொண்டு ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க மையத்திற்கு வந்து மதிய உணவு கூட சாப்பிடாமல் காத்திருந்தும் புகைப்படம் எடுக்க முடியாமல் திரும்பி செல்ல வேண்டி உள்ளது. எனவே பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணியில் கூடுதல் பணியாளர்களை நியமிக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

மேலும் செய்திகள்