புதுச்சேரி மாநிலத்தின் ரூ. 7 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்யவேண்டும் கோகுலகிருஷ்ணன் எம்.பி. வலியுறுத்தல்

கடனை தள்ளுபடி செய்யவேண்டும் என்று பாராளுமன்றத்தில் கோகுலகிருஷ்ணன் எம்.பி. வலியுறுத்தினார்.

Update: 2017-03-24 22:17 GMT

புதுச்சேரி,

பாராளுமன்றத்தில் புதுச்சேரி எம்.பி. கோகுலகிருஷ்ணன் எம்.பி. பேசியதாவது:–

சவலப்பிள்ளை

புதுச்சேரி தன்னுடைய பிரெஞ்சு தொடர்புகளால் ஒரு செல்லப்பிள்ளையாக மத்திய அரசால் நடத்தப்படுகிறது என்று மற்ற உறுப்பினர்கள் கருதலாம். உண்மையிலேயே நாங்கள் ஒரு சவலப்பிள்ளையாகத்தான் நடத்தப்பட்டிருக்கிறோம். கடந்த 2007–ம் ஆண்டு தனிக்கணக்கு ஆரம்பித்தபோது புதுவை அரசு மீது ரூ.2,200 கோடி கடன்சுமை திணிக்கப்பட்டது. இப்போது அது ரூ.7,200 கோடியாக உயர்ந்துள்ளது.

இது மத்திய அரசின் பாராமுகத்தால் எங்களுக்கு நடந்த சோதனை.

புதுச்சேரி அரசை ஜி.எஸ்.டி. கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக சேர்த்தது ஒரு மகிழ்ச்சியான செய்தி. அப்படி இருக்க அதே சட்ட திருத்தங்களுக்கு உட்பட்டு மத்திய நிதி அமைச்சகத்தின்கீழ் புதுச்சேரி அரசை உறுப்பினராக அங்கீகரிக்க அனைத்து சபை உறுப்பினர்களும் குரல் கொடுக்க வேண்டும். மத்திய நிதிக்குழு உறுப்பினராக இல்லாததால்தான் உள்ளாட்சி நிர்வாகம் சரியாக செயல்பட முடியவில்லை.

நிதிச்சுமை

மத்திய அரசிடம் இருந்து நிதி கிடைக்காததால் புதுவையில் உள்ளாட்சி அமைப்புகளால் சரியாக செயல்பட முடியவில்லை. அதேபோல் 14–வது மத்திய நிதிக்குழு பரிந்துரைப்படி எந்த ஒரு நிதியும் ஒதுக்கப்படவில்லை. அப்படி இருக்க எப்படி மீண்டும் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியும்? என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

தற்போது 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரை அமல்படுத்தப்பட்ட நிலையில் அதிகப்படியான செலவுக்கு ஒரு ரூபாய்கூட மத்திய அரசு வழங்கவில்லை. இந்த 7–வது ஊதியக்குழுவின் மூலம் புதுச்சேரி அரசுக்கு அதிக நிதிச்சுமையாக ரூ.700 கோடி தேவைப்படுகிறது. ஆகவே 2016–17 நிதிக் கோரிக்கைகளில் இந்த தொகையை உயர்த்தி தரவேண்டும்.

கடன் தள்ளுபடி

2016–17 திருத்திய மதிப்பீட்டில் ரூ.3,178 கோடி நிதி கோரியுள்ளோம். ஆனால் மத்திய அரசோ ரூ.1,425 கோடி மட்டுமே ஒதுக்கியது. அதேபோல் 2017–18ம் நிதியாண்டில் வெறும் 4 சதவீத அதிக நிதிக்கொடை மட்டுமே கொடுத்துள்ளது. எனவே குறைந்தபட்சம் 10 சதவீத அளவிற்கு நிதி உயர்த்தி கொடுத்தால்தான் அனைத்து செலவினங்களையும் ஈடுசெய்ய முடியும்.

ரூ.7 ஆயிரம் கோடிக்கு மேல் உள்ள கடன் சுமையை முழுவதுமாக தள்ளுபடி செய்யவேண்டும். புதுச்சேரி ஒரு யூனியன் பிரதேசமாக இருந்தாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சட்டசபையுடன், ஒரு அமைச்சரவையுடன் மற்ற மாநிலங்களுக்கு நிகராக இயங்கி கொண்டிருப்பதால் புதுச்சேரியை 122–வது அரசியல் சாசன சட்டப்பிரிவில் கூறியிருப்பதுபோல் ஒரு மாநிலத்திற்கு ஈடாக மதித்து அதனை மத்திய நிதிக்குழுவின் பரிந்துறை வரம்பிற்குள் வருமாறு செய்யவேண்டும்.

இவ்வாறு கோகுலகிருஷ்ணன் எம்.பி. பேசினார்.

மேலும் செய்திகள்