தஞ்சை பங்காரு காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

தஞ்சை பங்காருகாமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் காஞ்சி சங்கராச்சாரியார்கள் கலந்து கொண்டனர்.

Update: 2017-03-23 22:45 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மேலவீதியில் பங்காரு காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் 230 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும். இந்த கோவிலில் காமகோடி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் உள்ளன. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் செய்யப்பட்டன.

அதன்படி மேற்கு பகுதியில் புதிதாக ராஜகோபுரம் அமைக்கப்பட்டது. மேலும் 3 நிலை ராஜகோபுர விமானங்கள் புதுப்பிக்கப்பட்டும், கோசாலை, யாகசாலை, மடப்பள்ளி போன்றவைகளும் புதுப்பிக்கப்பட்டன. தரை தளத்தில் கருங்கல் அமைக்கப்பட்டும், மதில்சுவர்கள் திருப்பணிகள் செய்யப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகம்

இதையொட்டி கடந்த 17-ந்தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் நடைபெற்றது. 20-ந்தேதி யாகசால பூஜைகள் தொடங்கி நடைபெற்றன. நேற்று காலை 5.45 மணிக்கு 7-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து காலை 9 மணிக்கு கடங்கள் புறப்பாடு நடைபெற்றன. அதைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு கோபுரவிமானங்களுக்கு கும்பாபிசேகம் நடைபெற்றது. 10.30 மணிக்கு மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோபுரகலசத்தில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புனித நீரை ஊற்றி கும்பாபிசேகத்தை நடத்தி வைத்தார்.

கும்பாபிஷேக விழாவில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரசரஸ்வதிசுவாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். விழாவில் தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜாபோன்ஸ்லே, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுரை, பெரியகோவில் செயல் அலுவலர் மாதவன், தொழிலதிபர்கள் பி.எல்ஏ.சிதம்பரம், சுப்பிரமணியசர்மா, முன்னாள் கவுன்சிலர்கள் மேத்தா, சுவாமிநாதன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அன்னதானம்

கும்பாபிஷேக விழாவையொட்டி தஞ்சை மேலவீதியில் பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர், தண்ணீர் போன்றவை வழங்கப்பட்டன. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. தீயணைப்பு வாகனமும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீகார்யம் பரம்பரை தர்மகர்த்தா குஞ்சிதபாதம், அறங்காவலர்கள் கல்யாணராமன், பத்மநாபன், செயல் அலுவலர் சங்கர் மற்றும் திருப்பணிக் குழுவினர் செய்திருந்தனர். 

மேலும் செய்திகள்