பெங்களூருவில், பால் காய்ச்சிய போது கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது; பெண் பலி 1 வயது குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது

பெங்களூருவில் பால் காய்ச்சிய போது கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் பெண் பலியானார். அவரது 1 வயது குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.

Update: 2017-03-21 21:45 GMT

பெங்களூரு,

பெங்களூரு பேட்ராயனபுரா மைசூரு ரோடு அம்பேத்கர்நகரில் வசித்து வருபவர் வெங்கடேஷ். இவரது மனைவி சரளா (வயது 26). இவர்களுக்கு 1 வயதில் வினய் என்ற ஆண் குழந்தை உள்ளது. சம்பவத்தன்று காலையில் தனது குழந்தைக்காக கியாஸ் அடுப்பில் சரளா பால் காய்ச்சினார். அந்த சந்தர்ப்பத்தில் வீட்டின் மற்றொரு அறையில் இருந்து குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. இந்த நிலையில், திடீரென்று கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் வீட்டில் தீப்பிடித்து எரிந்தது. அந்த தீ மளமளவென சரளா மீதும் பிடித்து எரிந்தது.

இதனால் அவர் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். மேலும் குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும் அறைக்கு தீ பரவாமலும் சரளா பார்த்து கொண்டார். இதற்கிடையில், சரளாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தார்கள். பின்னர் வீட்டிற்குள் இருந்து விளையாடிய குழந்தையை அவர்கள் மீட்டனர். இதனால் அந்த குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.

பெண் சாவு

பின்னர் சரளா உடலிலும், வீட்டில் பிடித்து எரிந்த தீயையும் அக்கம் பக்கத்தினர் அணைத்தார்கள். அதன்பிறகு, பலத்த தீக்காயம் அடைந்து உயிருக்கு போராடிய சரளாவை மீட்டு விக்டோரியா ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு சரளா பரிதாபமாக இறந்து விட்டார். இதுபற்றி அறிந்ததும் பேட்ராயனபுரா போலீசார் விரைந்து வந்து சரளாவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிந்து வெடித்திருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

மேலும் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்ததும் சரளா கூச்சலிட்டதாலும், அதே நேரத்தில் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்ததாலும் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதும் தெரியவந்தது. இதுகுறித்து பேட்ராயனபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்