ஆனைமலை பகுதியில் மழை பெய்யாததால் அன்னப்பாறை ஆறு வறண்டது
ஆனைமலை பகுதியில் மழை பெய்யாததால் அன்னப்பாறை ஆறு வறண்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஆனைமலை
மேற்கு தொடர்ச்சி மலைக்குன்றுகளில் உற்பத்தியாகி 20 கிலோ மீட்டர் தூரம் சமவெளியில் பாய்ந்தோடி உப்பாற்றில் சங்கமம் ஆகும் வற்றாத ஜீவநதியாக அன்னப்பாறை ஆறு திகழ்ந்து வந்தது. இந்த ஆற்றில் ஏற்படும் வெள்ள நீரை தடுக்க சேத்துமடை காளியம்மன் கோவில் அருகில் பல ஆண்டுகளுக்கு முன்பு தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது.
இதே பகுதியில் முன்பு தரைமட்ட பாலம் கட்டப்பட்டிருந்தது. தரைப்பாலம் உடைந்து சேதம் அடைந்ததால், புதிய உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆற்றின் இரு கரைகளிலும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை, கோகோ, வாழை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
வறண்டதுஆனைமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் போதிய அளவு மழை பெய்யாததால் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இதற்கு அன்னப்பாறை ஆறும் தப்பவில்லை. வறட்சி காரணமாக எப்போதும் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும் அன்னப்பாறை ஆற்றில் நீர்வரத்து இல்லாமல் வறண்டு காட்சி அளிக்கிறது. இதனால் ஆற்றில் தண்ணீர் ஓடிய பகுதி தற்போது மண் சாலை போல காணப்படுகிறது.
அன்னப்பாறை ஆற்றில் தண்ணீர் இல்லாததால் அதன் கரையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகள் வற்றிவிட்டன. இதனால் தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:–
சீமைக்கருவேல மரங்கள்மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் அன்னப்பாறை ஆற்றினால் ஆனைமலை, சேத்துமடை பகுதிகளில் விவசாயம் செழித்து காணப்பட்டது. கடந்த ஆண்டு தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாமல் ஏமாற்றியது. இதைத்தொடர்ந்து பெய்ய வேண்டிய மழையும் கிடைக்காததால் வறட்சி ஏற்பட்டு, ஆற்றில் தண்ணீர் இல்லை. கடந்த 100 ஆண்டுகளுக்கு பின் ஏற்பட்டுள்ள வறட்சி அனைத்து நிலைகளையும் தலை கீழாகப் புரட்டிப் போட்டு விட்டது. இதனால் குடிக்கக் கூட தண்ணீர் இல்லாத மோசமான நிலை உருவாகி உள்ளது.
மேலும் அன்னப்பாறை ஆற்றில் சீமைக்கருவேல மரங்கள் அதிகளவு வளர்ந்துள்ளன. அவற்றையும், இரு கரைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற பொதுப்பணித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வருகிற ஜூன் மாதம் தென்மேற்கு பருவ மழை தொடங்குவதற்கு முன் ஆற்றை பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் பங்களிப்புடன் தூர் வார வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.